Published : 31 Aug 2023 07:16 AM
Last Updated : 31 Aug 2023 07:16 AM
கடலூர்: நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் என்எல்சியால் ஏற்படும் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் நிலவும் சூழலில், கடந்த மாதம், ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற அமைப்பு, ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ என்னும் தலைப்பில் என்எல்சி நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்து, கடந்த மாதம் 8-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதில், நெய்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் நீர், மண் மற்றும் காற்று மாசடைந்து இருப்பதாகவும், இப்பகுதி குடிநீரில் பாதரசம் கலந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து இதை விசாரித்தது.
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: இதைத் தொடர்ந்து என்எல்சி இந்தியா நிறுவனத்தைச் சுற்றியு உள்ள நெய்வேலி பகுதியை ஆய்வு செய்ய மத்திய, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் (ஆக.29) தொடங்கி, நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக நேற்று காலை பழைய நெய்வேலி, மேல்பாப்பன்பட்டு, மேல்பாதி, பெரியகுறிச்சி, குறவன்குப்பம் , கீழ்பாதி, வடக்குசேப்பளாநத்தம். உய்யகொண்டராவி, வடக்கு வெள்ளூர், தெற்கு வெள்ளூர் வெளிக்கூனங்குறிச்சி , காட்டு குறிச்சி, தொப்புளிக்குப்பம், அம்மேரி, ஆதண்டார்கொள்ளை, உள்ளிட்ட 33 கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட குடிநீர் மாதிரிகள் மற்றும் பொது குடிநீர் குழாய் மூலம் பயன்படுத்தும் தண்ணீர் மாதிரிகளை சேகரித்துள்ளனர். இந்த ஆய்வு இன்றும் நடக்கும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...