Published : 02 Jul 2014 08:40 AM
Last Updated : 02 Jul 2014 08:40 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் உயிருடன் உள்ளனர்

தரைமட்டமான 11 மாடி கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் உயிருடன் உள்ளனர் என்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார். இதை யடுத்து, மீட்புப் பணி வீரர்கள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.

சென்னை அருகே போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த 28-ம் தேதி மாலை இடிந்து தரைமட்டமான 11 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி 4-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடந்தது.

கட்டிடம் இடிந்தபோது அதற்குள் 72 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனை வரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். செவ்வாய்க்கிழமை மாலை வரை 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். 29 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை 4-வது தளம் வரை துளையிட்டு மீட்புப் படையினர் உள்ளே சென்றுள்ளனர். 4-வது தளத்தில் ஒருவர் சிக்கியிருப்பது தெரிந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

3 நாட்கள் தண்ணீர், உணவு இன்றி இருட்டில் இருந்ததால் அவர் சோர்வாகக் காணப்பட்டார். அவர், ஆந்திராவைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பது தெரியவந்தது.

அவருக்கு அதே இடத்தில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ‘என் அருகிலேயே மேலும் 2 பேர் சிக்கியிருந்தனர்’ என மகேஷ்குமார் கூறியுள்ளார். இதையடுத்து, மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, 4 தளத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பேர் உயிருடன் சிக்கி யிருப்பது தெரிந்தது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மீட்கப்பட்ட மகேஷ்குமார் கூறியதாவது:

மழை பெய்த அடுத்த சில நிமிடங்களில் கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது நான் உள்பட சுமார் 20 பேர் கட்டிடத்தின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்தோம். அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதி இடியவில்லை. கட்டிட இடிபாடு களை ஒரு தூண் வலுவாக தாங்கிக் கொண்டதால் நாங்கள் இடிபாடுகளில் சிக்கினாலும் உயிர் தப்ப முடிந்தது. 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளேன்.

நான் சிக்கியிருந்த பகுதிக்கு அருகில் பலர் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசினேன். எல்லோரும் பயத்துடன் உள்ளனர். முதல் நாள் பயங்கர அழுகைச் சத்தம் கேட்டது. பின்னர் அழுவதை பலர் நிறுத்தி விட்டனர். நான் மீட்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை அங்கிருந்து சத்தம் வந்தது.

இவ்வாறு மகேஷ் கூறினார்.

அவரை சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலர் உயிருடன் இருப்பதாக மகேஷ் கூறியதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேலும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

எந்த இடத்தில் இருந்து சத்தம் கேட்டது என மகேஷிடம் கேட்டறிந்து, அங்கு இடிபாடுகளை அகற்ற மீட்புப் படையினர் திட்டமிட்டுள்ளனர்.

அடையாளம் தெரியாத 13 உடல்கள்

உயிரிழந்தவர்களில் 13 பேர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இடிபாடுகளில் இருந்து மீட்கப்படும் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை மாலை வரை 30 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளன. இவற்றில் 17 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 9 உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்னும் 13 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

சென்னை அம்பத்தூர் பாடி பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம், மவுலிவாக்கம் கட்டிடத்தில் ஒப்பந்த முறையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கட்டிடம் இடிந்து 4 நாட்கள் ஆகியும் அவரைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

இதுகுறித்து அவரின் தம்பி இளங்கோ கூறுகையில், ‘‘கடந்த வெள்ளிக்கிழமை அண்ணனிடம் பேசினேன். நலமாக இருப்பதாகக் கூறினார். ஞாயிற்றுக்கிழமை சந்திப்பதாகச் சொன்னார். அவரது நிலைமை என்ன ஆனது என தெரியாமல் 4 நாட்களாக தவிக்கிறோம்’’ என்றார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனு, கிழிந்த ஆடைகளின் மூலம் தனது தங்கையின் உடலை அடையாளம் கண்டுபிடித்தார். அவர் கூறுகையில், ‘‘ஓராண்டுக்கு முன்புதான் என் தங்கைக்கு திருமணம் நடந்தது. சம்பவம் நடந்த அன்று போனில் அவரிடம் பேசினேன். சம்பளம் வாங்குவதற்காக காத்துக் கொண்டிருப்பதாக சொன்னார். இப்போது சடலமாகத்தான் அவளை காண முடிந்தது’’ என கண்ணீருடன் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x