Published : 27 Dec 2017 03:15 PM
Last Updated : 27 Dec 2017 03:15 PM
ஆழிப்பேரலை தாக்கி நேற்றுடன் 13 ஆண்டுகள் ஆகின்றன. நேற்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி மக்கள் நினைவஞ்சலி செலுத்தி அந்த சோக சுவடுகளை நினைவுக்கு கொண்டு வந்தனர்.
சுனாமியின் போது மரக்காணத்தில் கரை ஒதுங்கிய உடல்கள் 31. கரை ஒதுங்காமல் கடலோடு சென்றவர்களை கணக்கிட்டால் 50 பேரை தாண்டும் என்கிறார்கள் இங்குள்ள மீனவ மக்கள்.
இக்கடற்கரையில் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட அழகன்குப்பம் முதல் கூனிமேடுகுப்பம் வரையில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி உள்ளது. இதில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுனாமி நாளில் பெரும் சேதங்களை தடுத்தது இப்பகுதியில் உள்ள மணல் மேடுகளே. இந்த மணல் மேடுகள் தற்போது மனை வணிகர்களால் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து இப்பகுதியில் உள்ள வசவன்குப்பம் மீனவ கிராம மக்கள் கூறியதாவது:
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, இயற்கையாக உருவான ‘வம்பா மேடுகள்’ என அழைக்கப்படும் மணல் மேடுகள்தான் 2004 சுனாமியின் போது எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியது.
கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 150 மீட்டருக்கு உள்ளே இருந்த கடல் தற்போது எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்துள்ளது. எங்கள் குப்பத்தை கடந்து ‘வம்பா மேடு’ எனப்படும் மணல் மேடுகள் இந்த கடற்கரையில் நீண்டு உள்ளன. இந்த மேடுகள் தனியார் நிலமாக இருந்தாலும் கடற்கரையிலிருந்து 500 மீட்டர் நீளத்திற்கு மணல் அள்ளக்கூடாது. இந்த மேடுகளை கரைக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை.
இங்குள்ள மணல் மேடுகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கப்பட்டு வருகின்றன.ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மரக்காணம் கடற்கரைப் பகுதிகளில் ரிசார்ட்டுகள், சொகுசு பங்களா கட்ட வீட்டு மனைகளுக்கு இந்த மணல் மேடு பகுதிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு கரையில் இருத்து 500 மீட்டருக்குள் மணல் மேடுகளை அழித்து வீட்டு மனைகளாக்கி சுற்றிலும் சுவர் எழுப்பிஅதிக விலைக்கு மனைகளை விற்பனை செய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து வருகின்றனர்.
கரையோர மணல் மேடுகள் இயற்கை தடுப்பரண்களாக இருந்து சுனாமி, வெள்ளம், கடல் சீற்றம் பாதிப்புகளிலிருந்து எங்களை காத்து வருகிறது. மணல் மேடுகளை அழிப்பதற்கு.அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். நாங்கள் ஒன்றுகூடி தடுத்து வருகிறோம் என்று தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக வருவாய்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அப்படி யாரும் மணல் மேடுகளை அழிக்கவில்லை. புகார் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர். மரக்காணம் பேரூராட்சி அலுவலகத்தில் கேட்டதற்கு, “பேரூராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் குடியிருப்புக்கான கட்டுமான பணிகள் அமைக்க எந்த அனுமதியும் அளிக்கவில்லை. கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலத்தை விற்பனை செய்ய கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை சொத்துக்களாக பதிவு செய்யக்கூடாது என பதிவாளர் அலுவலகத்தில் பேரூராட்சி சார்பாக ஆட்சேபணை செய்துள்ளோம். மணல் மேடுகள் அழிக்கப்படுவது உண்மைதான். வருவாய்துறை இதில் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது’’ என்று தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT