Published : 30 Aug 2023 03:56 PM
Last Updated : 30 Aug 2023 03:56 PM

பிரக்ஞானந்தாவுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை மற்றும் நினைவு பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.30) முகாம் அலுவலகத்தில், அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக உயரிய ஊக்கத் தொகையான 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்தினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

மேலும், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை அனைவரும் பாராட்டும் வகையில் தமிழகத்தில் சிறப்பாக நடத்தியது, மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று ஏற்படுத்திட “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” உருவாக்கியது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சர்வதேச செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, 3 வயது முதல் செஸ் விளையாடத் தொடங்கி, 5 வயது முதல் செஸ் தொடர்களில் பங்கேற்று வருகிறார். 10 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்று இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2013-ம் ஆண்டு 8 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 2015-ம் ஆண்டு 10 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார். மேலும், 12 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று அன்றைய காலத்தில் குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையும், 16 வயதில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தி சாதனையும் படைத்துள்ளார்.

பிரக்ஞானந்தா, இளம் வயதில் இந்தியாவில் இருந்து உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். செஸ் CANDIDATE தொடரில் விளையாட தேர்வாகி உள்ள இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரக்ஞானந்தா, FIDE செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று தனி வீரராகவும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.

அண்மையில் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்ற பிரக்ஞானந்தாவை தமிழக முதல்வர் வீடியோகால் வாயிலாக தொடர்புக்கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். மேலும், உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்து தமிழகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் சிறப்பான முறையில் செஸ் போட்டிகளில் சாதனை படைத்து வரும் பிரக்ஞானந்தாவைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வர் இன்று உயரிய ஊக்கத்தொகையான 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, வேலம்மாள் கல்வி குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்முருகன், பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு, தாயார் நாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x