Published : 30 Aug 2023 06:02 AM
Last Updated : 30 Aug 2023 06:02 AM
சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் எப்போதும் முதல் ‘பெஞ்ச்’ மாணவன்தான் என்று அவரது பள்ளி இயற்பியல் ஆசிரியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அனுப்பப்பட்ட லேண்டர், ரோவர் கலன்கள் நிலவில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழகம் கூடுதல் பெருமிதத்துடன் கொண்டாடி வருகிறது.
வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல், கடந்த 1990-களில் விழுப்புரம் மாவட்டத்தில் ரயில்வே ஊழியராக பணியாற்றியவர். விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய அரசின் ரயில்வே மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலோ - இந்தியன் பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு வரை படித்தார் வீரமுத்துவேல்.
‘‘படிக்கும் காலத்தில் சராசரி மாணவனாகவே இருந்தேன். அடுத்து எங்கு, என்ன படிக்கப் போகிறோம் என்பது குறித்து எந்த ஒருதிட்டமும் இல்லை. வீட்டில் பெற்றோர், குடும்பத்தினர் யாரும் படித்தவர்கள் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து விழுப்புரத்தில் உள்ள ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்ந்தேன்’’ என்று ஒரு வீடியோ பதிவில் வீரமுத்துவேல் கூறியிருந்தார்.
விழுப்புரம் ரயில்வே பள்ளியில் 1992-93 மற்றும் 1993-94-ம் கல்வி ஆண்டில் வீரமுத்துவேல் 9, 10-ம்வகுப்புகள் படித்தபோது, அவருக்கு இயற்பியல் பாடம் எடுத்த ஆசிரியை என்.சுதாமதி, தற்போது சென்னை பெரம்பூர் ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். தன் மாணவன் வீரமுத்துவேல் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறியதாவது:
சந்திரயான் சாதனையாளரான வீரமுத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில் அமைதியான மாணவராக வலம் வந்தவர். ஆசிரியர்களிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொள்வார். சக மாணவர்களுடன் அன்பாக பழகுவார். சுறுசுறுப்பாக இருப்பார். எந்த கேள்வி கேட்டாலும் பொறுமையாக பதில் சொல்வார். தன்னம்பிக்கை மிக்கவர்.
அறிவியல், கணிதத்தில் சம அளவில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆய்வக வகுப்புகளில் கூடுதல் கவனத்துடன் இருப்பார். உற்சாகத்துடன் புள்ளிவிவரங்களை எடுப்பார். சந்தேகம் கேட்பார். எதையும் ஆர்வத்துடன் உற்று நோக்கி, சுய முயற்சியாலேயே கற்றுக்கொள்ள விரும்புவார். இந்த ஆர்வம், முயற்சிதான் அவரை மாபெரும் உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது. பொதுவாகவே, பெற்றோரை மதித்து நடக்கும் எந்த ஒரு மாணவரும் சிறந்து விளங்குவார்கள்.
தற்போது பேட்டிகளில் தன்னை சாதாரண மாணவனாக அடையாளம் காட்டிக் கொண்டாலும், வகுப்பறையில் அவர் எப்போதும் முதல் ‘பெஞ்ச்’ மாணவன்தான். நல்ல மதிப்பெண் பெறுவதுடன், ரயில்வே பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் அறிவியல் கண்காட்சிகள், விளையாட்டு போட்டிகளில் தவறாமல் பங்கெடுப்பார்.
சந்திரயான் திட்ட இயக்குநராக அவர் பங்காற்றியது மாபெரும் சாதனை. இதுபோன்ற பணிகளுக்கு ஆழ்ந்த சிந்தனை அவசியம். அது இளம் வயதிலேயே அவரிடம் இருந்தது.
அவரது தந்தை ரயில்வே தொழிற்சங்க தலைவராக இருந்ததால், அந்த தலைமை பண்புடன்தான் மகனையும் வளர்த்திருந்தார். மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பது அவர்களது நலனுக்கே என்று நன்கு உணர்ந்தவர். ஆசிரியர்கள் திட்டுவது, மாணவர்களை பக்குவப்படுத்துமே தவிர பாழாக்காது என்பதற்கு வீரமுத்துவேல் சிறந்த உதாரணம்.
நிலாவை ரசித்து, நிலாவை படித்த எங்கள் மாணவர், தற்போது நிலாவுக்கே விண்கலன் அனுப்பி சாதனை படைத்திருப்பது பெருமையாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி, ரயில்வே பள்ளிகளுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
அவர் படித்து வந்த விழுப்புரம் பள்ளி எதிர்பாராதவிதமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுவிட்டது. மீண்டும் பள்ளியை திறக்க முயற்சி எடுக்கப்பட்டால், ரயில்வே நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். சந்திரயான் திட்டப் பணிகள் முடிந்த பிறகு, விழுப்புரத்துக்கு வந்து, ரயில்வே பள்ளி ஆசிரியர்கள், அங்கு படித்த மாணவர்களை சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார். என் மாணவன் வீரமுத்துவேலை சந்திரயான் சாதனையாளராக சந்திக்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். பெரம்பூர் ரயில்வே மேல்நிலைப்பள்ளி முதல்வர் டி.சிவக்குமார் உடன் இருந்தார். வீரமுத்துவேலின் ஆங்கில ஆசிரியை ஸ்ரீலா சரோஜியும் இப்பள்ளியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT