Published : 05 Dec 2017 08:47 AM
Last Updated : 05 Dec 2017 08:47 AM
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட, கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமான சுயேச்சைகள் முற்றுகையிட்டதால், தொகுதியே அல்லோலப்பட்டது. ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் போல, வரிசைகட்டி நின்ற வேட்பாளர்களை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். பொதுவாக, தேர்தல்களில் சுயேச்சைகள் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கும். ஆர்.கே.நகரில் தலைகீழ். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வந்தவர்கள்போல, கக்கத்தில் ஃபைலோடு நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் வரிசைகட்டி நின்றார்கள். மனுதாக்கல் தொடங்கிய நேரத்தில், ஒருசிலரே வந்திருந்ததால், தேர்தல் அலுவலகத்தில் நாற்காலியெல்லாம் போட்டு அவர்களை அமர வைத்திருந்தார்கள். நேரம் ஆகஆக, ஓட்டு போடும் வாக்காளர்கள் போல சாரை சாரையாக வரத் தொடங்கியது சுயேச்சைகள் கூட்டம்.
இதற்கிடையில், நடிகர் விஷால், ஜெ.தீபா, டிராபிக் ராமசாமி என பிரபலங்களும் ஒவ்வொருவராக வந்ததால் தொகுதியே அல்லோலப்பட்டது.
முன்னதாக, விஷால் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு, அண்ணா நகரில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்துக்குச் சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்துக்குச் சென்று சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவித்தார். மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பிறகு, தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலகத்துக்கு பகல் 2.20 மணிக்கு வந்தார் விஷால்.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டோக்கன் கொடுப்பது வழக்கம். நேற்று வேட்பாளர்கள் கூட்டம் அலைமோதியதால், அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டது. விஷாலுக்கு 68-வது டோக்கன் வழங்கப்பட்டது. அப்போது 26-வது டோக்கன்தான் ஓடிக்கொண்டிருந்தது.
இதற்குள் அங்கு காத்திருந்த சுயேச்சைகள் சிலர், ‘விஷாலும் சுயேச்சை வேட்பாளர்தான். எனவே, வேட்புமனு தாக்கல் செய்ய அவருக்கு முன்னுரிமை தரக்கூடாது’ என்று போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர். அப்படியும் அடங்காமல் அவர்கள் கூச்சல் போட்டதால், ‘‘எல்லோரும் போய் வரிசையில நில்லுங்க’’ என்று கூறிய அதிகாரிகள், நாற்காலிகளை அப்புறப்படுத்தினர்.
எப்படியும், இன்னும் 2 மணி நேரமாகும் என்பதால், வெளியே வந்தார் விஷால். அருகே உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் சிறிது நேரம் காத்திருந்தார். தண்ணீர் கேன் ஏற்றியிருந்த வேனில் சிறிது நேரம் உட்கார்ந்தார். அப்பகுதி பெண்கள், மாணவர்கள், இளைஞர்களோடு சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். பல ‘செல்ஃபி’களுக்கு போஸ் கொடுத்தார். மாலை 4.40 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். சட்ட ஆலோசகர் சார்லஸ், நடிகர்கள் ரமணா, உதயா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ‘‘நான் நடிகர் என்பதால் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்கின்றனர். இத்தொகுதியில் கடை வைத்திருந்தாலோ, தொழிலதிபராக இருந்தாலோ இப்படி கூறுவார்களா? வாக்களித்துவிட்டு நல்லது நடக்கும் என்று 5 ஆண்டுகள் காத்திருக்காமல், ‘ஏன் எங்களுக்கு நல்லது செய்யவில்லை?’ என்று கேட்பதற்கு இத்தேர்தல் நல்ல வாய்ப்பு. இத்தொகுதி மக்களின் ஒற்றுமை, நேர்மையை இத்தேர்தலில் காண முடியும். தேர்தல் வெற்றிக்காக கமல், ரஜினியிடம் ஆதரவு கேட்கமாட்டேன்’’ என்றார்.
ஜெ.தீபாவும் நீண்ட நேரம் காத்திருந்து, பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், அலுவலகத்துக்குள் வராமல் நீண்ட நேரம் தனது ஏசி காரிலேயே காத்திருந்தார். அவரைப் பார்க்க அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூடியதால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
“தொப்பி வேணும்.. பேட்டு வேணும்.. விசிலு வேணும்.”
‘டிசைன் டிசைனாக’ வந்த வேட்பாளர்களை சமாளிப்பதற்குள் போலீஸார் படாதபாடு பட்டனர்.
* ‘கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள். டாஸ்மாக் மற்றும் இறக்குமதி மதுவகைகள் கள்ளைவிட நல்லவை. கள்ளுக்கான தடை நியாயமானதுதான் என்பதை நிரூபிப்போருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்’ என்ற அறிவிப்பு பலகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு வந்தார் தமிழ்நாடு கள் இயக்க வேட்பாளர் இல.கதிரேசன்.
* தொப்பி அணிந்தபடி குதிரையில் வந்தார் கோவையை சேர்ந்த ஏ.நூர் முகமது. முன்னதாகவே அவரை நிறுத்திய போலீஸார், குதிரையில் இருந்து இறங்குமாறு கூறினர். அவரோ, ‘மனு தாக்கல் பண்ற இடம் வரைக்கும் குதிரையிலதான் போய் இறங்குவேன்’ என்று அடம்பிடித்தார். அலுவலகம் வந்ததும் விடாப்பிடியாக அவரை போலீஸார் இறக்கிவிட்டனர். இதே தொகுதியில் கடந்த ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து தொப்பி சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இப்போதும் தொப்பி சின்னத்தையே கேட்டிருக்கிறார்.
* தமிழகத்தில் டெங்கு கொசு பாதிப்பு அதிகம் இருப்பதைக் காட்டும் வகையில், கொசு வேடம் அணிந்தவர்களுடன் வந்தார் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் வி.ஜி.தனலட்சுமி.
* வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் ‘மனிதன்’. பின்னோக்கியே நடப்பதை கடந்த 1991-ம் ஆண்டு முதல் வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்றும் அப்படித்தான் வந்தார். ‘‘வார்டு தேர்தல் தொடங்கி, ஜனாதிபதி தேர்தல் வரை, இனி ஒரு தேர்தலையும்ம் விடப்போறதில்ல’’ என்று உறுதியோடு சொன்னார்.
* எம்ஜிஆர் கெட்டப்பில் வந்திருந்தார் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பி.சக்கரவர்த்தி.
* ‘எனக்கு தொப்பி.. எனக்கு விசில்.. எனக்கு பேட்’ என்று கேட்காதகுறையாக, இந்தச் சின்னங்களுக்கு அலைமோதினர் சுயேச்சைகள். காரணம், டிடிவியும், விஷாலும் இந்தச் சின்னத்தைதான் கேட்கிறார்களாம். சீப்பை ஒளித்துவைத்தால், கல்யாணம் நின்றுவிடும் என்ற எண்ணமாக இருக்கலாம்.
* ‘இத்தனை பேர் போட்டியிட்டா, கண்டிப்பா ஓட்டு மெஷினு தாங்காது. வாக்குச்சீட்டுதான் கொண்டுவரணும். இல்லைன்னா, தேர்தலே கேன்சல் ஆகும். பார்க்கலாம், நமக்காச்சு, தேர்தல் கமிஷனுக்காச்சு’ என்ற பேச்சுகளும் வேட்பாளர்கள் கூட்டத்தில் அடிபட்டது.
* ‘அட போய்யா, இவ்ளோ பெரீய்ய கியூவுல எவ்ளோ நேரம் நிக்குறது?’’ என்று டென்ஷனாகி, வேட்புமனு ஃபைலை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு நடையைக் கட்டியவர்களும் உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT