Published : 29 Aug 2023 11:12 PM
Last Updated : 29 Aug 2023 11:12 PM
மதுரை: மதுரையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவர் தவழ்ந்து வந்து மனு கொடுத்தார்.
மதுரை மாநகராட்சி 3வது மண்டலம் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மேயர் இந்திராணி தலைமை வகித்தார். புதிய குடிநீர் குழாய் இணைப்பு, புதிய பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் திருத்தம் தொடர்பாக 22 மனுக்களும், நகரமைப்பு தொடர்பான 12 மனுக்களும், சொத்து வரி பெயர் திருத்தம் தொடர்பாக 13 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக ஒரு மனுவும், இதர கோரிக்கை வேண்டி இரண்டு மனுக்களும் என மொத்தம் 50 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மேயர் இந்திராணி பெற்றுக் கொண்டார். மனுக்களை தாமதம் செய்யாமல் விசாரித்து பொதுமக்களுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என மேயர் இந்திராணி இந்த முகாமில் கலந்து கொண்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
வாரந்தோறும் மண்டல அலுவலங்களில் மேயர் பங்கேற்கும் இந்த முகாமில் மேயரிடம் வழங்கும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அதனால், பொதுமக்கள், தங்கள் வீடு முதல் குடியிருப்புகள் வரையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த முகாம்களில் பங்கேற்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். பெண்கள், வயதானவர்கள், கர்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் வருகிறார்கள். அவர்களுள் மேயரிடம் காத்திருந்து மனுக்களை கொடுக்கும்வரை அவர்கள் அமருவதற்கான இருக்கைகள் போடுகின்றனர். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி போடுவதில்லை.
அதனால், மேயரிடம் மனு கொடுக்கும்போது சிறு குழந்தைகள் போல் தவழ்ந்து வர வரவேண்டிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது. இன்று நடந்த முகாமில், அப்படி ஒரு மாற்றுத்திறனாளி தவழ்ந்து வர, அதை சற்றும் எதிர்பாராத மேயர் இந்திராணி பதற்றமடைந்து உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்து, குனிந்து சென்று அந்த மாற்றுத்திறனாளிடம் மனுவை பெற்றுக் கொண்டார்.
மேலும், அவர் வழங்கிய மனு மீது அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT