Published : 29 Aug 2023 06:24 PM
Last Updated : 29 Aug 2023 06:24 PM

சிலிண்டருக்கு  ரூ. 830 உயர்த்தியது எதற்கான தண்டனை? - முத்தரசன் கேள்வி

கோப்புப்படம்

சென்னை: ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்தது ஓணத்துக்கான பரிசு என்றால், 830 ரூபாயை படிப்படியாக ஏற்றியது எதற்காக கொடுக்கப்பட்ட தண்டனை என்பதை ஒன்றிய அரசு சொல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமையல் எரிவாயுவின் விலையை ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 200 குறைக்கலாம் என ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தியப் பெண்களுக்கு ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அளித்திருக்கும் பரிசு இது என சொல்லப்பட்டுள்ளது. மோடி 2014இல் பதவி ஏற்ற போது ஒரு சிலிண்டரின் விலை ரூ.410 ஆகும். ஆனால் இப்போது 1240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலத்தில், மூன்று சிலிண்டர் வாங்கியதற்கான பணத்தில், இப்பொழுது ஒரு சிலிண்டர் மட்டுமே வாங்க முடியும்.

ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்தது ஓணத்துக்கான பரிசு என்றால், 830 ரூபாயை படிப்படியாக ஏற்றியது எதற்காக கொடுக்கப்பட்ட தண்டனை என்பதை அரசு சொல்ல வேண்டும். மோடி பதவி ஏற்பதற்கு முன்பு கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 109.5 அமெரிக்க டாலராக இருந்தபோது, லிட்டருக்கு ரூபாய் 66 வீதம் பெட்ரோல் விற்கப்பட்டது. 84.23 அமெரிக்க டாலர் என்று கச்சா எண்ணெய் விலை தற்போது சரிந்த பின்பும், பெட்ரோல் விலை 103 ரூபாயாகவே மோடி அரசு வைத்திருக்கிறது. இதுவும் யாருக்கு கொடுக்கப்பட்டு வரும் பரிசு என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கிய பின்பு, 2024 தேர்தலை நினைத்து பாஜக பதட்டத்தில் இருக்கிறது. இதனால் இத்தகைய பரிசுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அது தள்ளப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மட்டுமல்லாது, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையையும், மோடி அரசு கச்சா எண்ணெய் விலை சரிந்த அளவுக்கு குறைத்தே தீர வேண்டும். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. | வாசிக்க > வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x