Published : 29 Aug 2023 01:20 PM
Last Updated : 29 Aug 2023 01:20 PM

ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.500 ஊக்கத் தொகையாக வழங்க அரசு முன்வர வேண்டும்: அன்புமணி கோரிக்கை

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: "மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ.2203 மட்டுமே அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள 797 ரூபாயை தமிழக அரசு ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். அவ்வளவு தொகை வழங்க வாய்ப்பில்லை என்றால் குறைந்த அளவு குவிண்டாலுக்கு 500 ரூபாயாவது ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் வழக்கமாகத் தொடங்கும் அக்டோபர் ஒன்றாம் நாளுக்கு பதிலாக செப்டம்பர் ஒன்றாம் நாளே தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை அறுவடை முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில், அந்த நெல்லுக்கு உயர்த்தப்பட்ட விலை கிடைப்பதற்கு வசதியாக நெல் கொள்முதலை செப்டம்பர் மாதமே தொடங்கும்படி பாமக வலியுறுத்தி வந்த நிலையில், அதன்படியே கொள்முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் முன்கூட்டியே அறுவடை முடித்த உழவர்கள் பயனடைவார்கள்.

அதேநேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலை போதுமானதல்ல. ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்த அளவு ஆதரவு விலையாக சன்ன ரகத்துக்கு ரூ.2203, சாதாரண ரகத்துக்கு ரூ.2183 என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அத்துடன் சாதாரண நெல்லுக்கு ரூ82, சன்னரக நெல்லுக்கு ரூ.107 வீதம் ஊக்கத்தொகை சேர்த்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு சாதாரண நெல்லுக்கு ரூ 75, சன்னரக நெல்லுக்கு ரூ.100 வீதம் ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு, நடப்பாண்டில் ரூ. 7 மட்டுமே, அதாவது ஒரு கிலோவுக்கு 7 காசு மட்டுமே உயர்த்தி வழங்கியிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

இந்தியாவில் நெல்லுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதனால், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. அதன் காரணமாக உலகம் முழுவதும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற, நெல் சாகுபடியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. நெல் கொள்முதல் விலையை அதிகரிப்பதன் மூலம் தான் இதை சாதிக்க முடியும். ஆனால், கிலோவுக்கு 7 காசு அளவுக்கு ஊக்கத்தொகையை உயர்த்துவதன் மூலம் நெல் சாகுபடியை எவ்வாறு அதிகரிக்க முடியும்?

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக உழவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய ரூ.2000 செலவு ஆவதாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பீடு செய்திருக்கிறது. அத்துடன் 50%, அதாவது ரூ.1000 லாபம் சேர்த்து வழங்கினால் கூட, குவிண்டாலுக்கு ரூ.3000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும். மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ.2203 மட்டுமே அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள 797 ரூபாயை தமிழக அரசு ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். அவ்வளவு தொகை வழங்க வாய்ப்பில்லை என்றால் குறைந்த அளவு குவிண்டாலுக்கு 500 ரூபாயாவது ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்", என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x