Published : 29 Aug 2023 04:26 AM
Last Updated : 29 Aug 2023 04:26 AM
சென்னை: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 2 ஆண்டுகளாக வேகமெடுத்துள்ளது. தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.66 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் விலைவாசி, தேசிய அளவைவிட குறைவாக உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை தமிழக புள்ளியியல் துறை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மாநிலங்களின் உற்பத்தி மதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல், திட்ட செயலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன்அடிப்படையில், கடந்த 2 ஆண்டுகளுக்கான உற்பத்தி மதிப்பை தமிழக புள்ளியியல் துறை கணித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் உற்பத்தி மதிப்பு 2021-22-ம் ஆண்டில் நிலைத்த விலை ரூ.13,43,287 கோடி, நடப்பு விலை ரூ.14,53,321 கோடியாக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் நிலைத்த விலை ரூ.20,71,286 கோடி, நடப்பு விலை ரூ.23,64,514 கோடியாக இருந்தது.
மாநில வளர்ச்சி: 2021-22-ம் ஆண்டில் தமிழக பொருளாதாரம் நடப்பு விலையில் தேசிய அளவில் 2-வது பெரிய பொருளாதாரமாகவும், நிலைத்த விலையில் 3-வது பெரிய பொருளாதாரமாகவும் உள்ளது. தமிழகபொருளாதாரம் 2021-22-ம் ஆண்டில் நிலைத்த விலையில் 7.92 சதவீதம், 2022-23-ம் ஆண்டில் 8.19 சதவீதம் என வளர்ச்சி அடைந்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் நடப்பு விலையில் வளர்ச்சி அளவு 15.84 சதவீதம், 2022-23-ம் ஆண்டில் 14.16 சதவீதமாக உள்ளது.
அதேபோல, மாநில வளர்ச்சி விகிதம் 2021-22-ம் ஆண்டில் நிலைத்த விலையில் 8.19 சதவீதம், நடப்பு விலையில் 15.84 சதவீதமாக இருந்தது. இது 2022-23-ம் ஆண்டில் 7.9 மற்றும் 14.8 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில் விலைவாசி, தேசிய அளவைவிட குறைவாக உள்ளது. பணவீக்க குறியீட்டு எண் மாநில அளவில் 2021-22-ல்7.92 சதவீதம், 2022-23-ல் 5.97 சதவீதமாக காணப்பட்டது. அதேநேரம் தேசிய அளவில் 9.31 சதவீதம் மற்றும் 8.82 சதவீதமாக உயர்ந்திருந்தது.
கரோனா காலத்தில் மாநில வளர்ச்சி குறைந்தது. அதற்கு முந்தைய 2 ஆண்டுகளில் அதாவது 2018-19-ம் ஆண்டில் 7.01 சதவீதம், 2019-20-ம் ஆண்டில் 3.25 சதவீதமாக இருந்தது. கரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டுகளில் மாநில வளர்ச்சி உயர்ந்து 7.92 சதவீதம், 8.19 சதவீதமாக உள்ளது.
தனிநபர் வருமானம்: தமிழகத்தில் தனிநபர் ஆண்டு வருமானம் 2021-22-ல் ரூ.1,54,557 ஆகவும், 2022-23-ல் ரூ.1,66,727 ஆகவும் இருந்தது. தேசிய அளவில் தனிநபர் வருமானம் ரூ.92,583 மற்றும் ரூ.98,374 ஆக இருந்தது.
அதேபோல, தமிழகத்தில் உற்பத்தி துறையின் வேகமும் வளர்ச்சி அடைந்துள்ளது. 2021-22-ல் 9.7 சதவீதம் என இருந்த நிலையில், 2022-23-ல் 10.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. சேவை துறையின் பங்கு 2022-23-ல் ரூ.6,57,363 கோடி.மொத்த உற்பத்தி மதிப்பில் இது 50.9 சதவீதம். மத்திய அரசின் அளவான 54 சதவீதத்தைவிட இது குறைவு. 2011-12 முதல் 2017-18 வரை ஏற்ற இறக்கங்களுடன் இருந்த மாநில பொருளாதார வளர்ச்சி, அதன்பிறகு பெரிய சரிவை சந்தித்தது. கரோனாவுக்கு பிறகு வேகமெடுத்து 2 ஆண்டுகளாக 8 சதவீதம் என்ற சராசரி அளவில் வளர்கிறது.
மின்னணு ஏற்றுமதியில் முன்னிலை: கரோனாவுக்கு பிறகு, தற்போது மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. ரூ.2.50 லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளன. சேவை துறையில் நாம் இன்னும் வளரவேண்டி உள்ளது. தமிழக பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மை பின்தங்கியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் உற்பத்தி துறையில் கைபேசி உற்பத்தி, ஏற்றுமதி அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறையாமல் இருக்கும் என்பதை இது காட்டுகிறது. இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த 7-8 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மகாராஷ்டிராவை நாம் தாண்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT