Published : 29 Aug 2023 06:26 AM
Last Updated : 29 Aug 2023 06:26 AM
சேலம்: தேசிய நெடுஞ்சாலைக்கான செலவினம் குறித்து மத்திய தணிக்கை குழு சுட்டிக்காட்டியிருப்பதை ஊழல் என்று சொல்ல முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தை அடுத்த ஓமலூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றனர். அமைச்சர் உதயநிதி கட்சிக்கு வந்தே 6 மாதம்தான் ஆகிறது. அவர் அதிமுக மாநாட்டைப் பற்றி என்ன பேச முடியும்.
தேசிய நெடுஞ்சாலைக்கான செலவினம் குறித்து மத்திய தணிக்கை குழு சுட்டிக்காட்டியிருப்பதை ஊழல் என்று சொல்ல முடியாது. திமுக ஆட்சியிலும் கூட, தணிக்கை துறை இதுபோன்று கூறியிருக்கிறது.
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். டெல்டாவுக்கு உரிய காலத்தில் நீர் திறக்கப்பட்டது என்று முதல்வர் கூறினார். ஆனால், பாசன காலம் முழுவதும் நீர் திறக்கப்பட வேண்டும். கர்நாடகாவில் மழைக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. மேட்டூருக்கு நீர் வரத்து 1,024 கனஅடியாக குறைந்துவிட்டது. அணையில் 52 அடிக்கு தான் நீர் இருக்கிறது.
காவிரி நீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன. தன்னை டெல்டாகாரன் என்று கூறும் முதல்வருக்கு, டெல்டா விவசாயிகள் என்ன கூறப்போகிறார்கள்.
பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்த்திருந்தால், டெல்டாவில் கருகியுள்ள பயிர்களுக்கு இழப்பீடு கிடைத்திருக்கும். இப்போது விவசாயிகளுக்கு உதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
பல பேரூராட்சிகள், நகராட்சிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். அதிமுக 3 ஆக உடைந்துவிட்டது என்று கூறியவர்களுக்கெல்லாம், அதிமுக உடையவில்லை என்று மதுரை மாநாடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...