Published : 29 Aug 2023 06:01 AM
Last Updated : 29 Aug 2023 06:01 AM

அரிய வகை நோய்களுக்கான விழிப்புணர்வு அவசியம்; குழந்தைக்கு நோய் தாக்காதபடி கருவுற வைக்க முடியும்: கனிமொழி சோமு தகவல்

சென்னை சேப்பாக்கத்தில் அஸ்வதா துலாபாரத் அமைப்பின், அரியவகைநோய்கள் பற்றிய கொள்கை அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்விஎன்.சோமு வெளியிட்டார். உடன் அஸ்வதா துலாபாரத் அமைப்பின் இயக்குநர் பிரீத்தி ராஜகோபால், சிறந்த நிர்வாகத்துக்கான கூட்டணி (கேம்) அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதர் நாராயணன்.

சென்னை: தாய்க்கு அரியவகை நோயின் தாக்கம் இருந்தால் உரிய சிகிச்சைஅளித்து அந்நோய் குழந்தையைத் தாக்காத வகையில் கருவுற வைக்கமுடியும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு தெரிவித்தார்.

புற்றுநோய் மற்றும் அரியவகை நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அஸ்வதா துலாபாரத் அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னைசேப்பாக்கத்தில் நேற்று நடந்தது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு கலந்து கொண்டு பேசியதாவது: ஹீமோபிலியா என்ற ரத்தக் கசிவு நோய் மற்றும் முதுகெலும்பு தசைச் சிதைவு (எஸ்எம்ஏ) போன்ற அரியவகை நோய்கள் குறித்தபோதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை.

இந்நோய்கள் மரபணுவில் உள்ள புரோட்டீன் குறைபாட்டால் வரக்கூடியவை. இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள், எந்த ஒரு செயலையும் சாதாரணமாகச் செய்ய முடியாது. ஓடியாடி விளையாட முடியாது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 70 சதவீதம் பேர் 15 வயதைத் தாண்டுவதே பெரியபோராட்டமாகும்.

இந்த அரிய நோய்களில் சிலவற்றைக் குணப்படுத்தி விடலாம். இதைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். அதன்படி தாய்மார்கள் `எக்ஸோம்' மற்றும் `எம்பிஎல்ஏ' பரிசோதனைகளைக் கருத்தரிக்கும் முன்னரே செய்துகொண்டால் மிகவும் பயனுள்ளதாகும். கருவுற்ற பின் இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டால், சிக்கலை ஏற்படுத்தும்.

கருவுற இருக்கும் தாய், தனது குடும்ப வரலாற்றில் இதுபோன்று குழந்தைகளுக்கு பிரச்சினை உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் குழந்தையை அந்த நோய் தாக்காதபடி உரிய சிகிச்சையில் கருவுற வைக்க முடியும். நோய்க்கான மருத்துவச் செலவு அதிகம் என்பதால், நாடாளுமன்றத்தில் அரியவகை நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வலியுறுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் அரிய நோய் மரபணு சோதனை மையம் கடந்த 2022-ல் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இதில் ஒரு நோயாளிக்கான பரிசோதனை செலவுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்படுகிறது. ஒருவருக்கு ரூ.50 லட்சம் வரை ஆகும். இதுவரை 60 பேர் இந்த பரிசோதனை மேற்கொள்ள பதிவு செய்துள்ளனர்.

அதேபோல ஐசிஎம்ஆர், மருத்துவ திட்டக் குழுவிடம் புதிய மரபணு சோதனை மையத்தை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்குமருத்துவமனையில் தொடங்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு பதிவேடு தொடங்கப்பட்டு, இதில் அரியவகை நோய்களைக் கொண்ட நோயாளிகள் பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவர்களைக் கண்காணித்து எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். இதையொட்டி எம்பிஎல்ஏ, எக்ஸோம் ஆகிய பரிசோதனைகள் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அஸ்வதா துலாபாரத் அமைப்பின் அரிதான நோய் பற்றிய கொள்கை அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு வெளியிட்டார். இந்நிகழ்வில் அஸ்வதா துலாபாரத் அமைப்பின் இயக்குநர் பிரீத்திராஜகோபால், சிறந்த நிர்வாகத்துக்கான கூட்டணி (கேம்) அமைப்பின் நிறுவனர் தர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x