Published : 29 Aug 2023 04:08 AM
Last Updated : 29 Aug 2023 04:08 AM
ராமேசுவரம்: மீனவர்கள் குறைந்த வட்டி மற்றும் வட்டி மானியத்துடன் கூடிய கிசான் கடன் அட்டைகளை பெற்று பயனடையலாம் என மீன்வளத் துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தொழில் செய்வதற்கான படகு, வலைகள், படகுகளை இயக்குவதற்கான இன்ஜின் உள்ளிட்டவற்றை வாங்க மீனவர்கள் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குவதைப் போல, மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மீன்வளத் துறை மூலம் செயல்படுத்தி வருகின்றன.
இந்த கிசான் மீனவர் கடன் அட்டையை பெறுவது குறித்த வழிமுறைகளை ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி அளித்துள்ள விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: மீன்பிடி விசைப்படகு, நாட்டுப் படகுகளின் நடைமுறை செலவினங்களான டீசல், பனிக்கட்டி, கூலி மற்றும் இதர இனங்களுக்கு தேவையான கடன் உதவியை வங்கிகள் மூலம் பெறுவதற்கு மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை பெரிதும் உதவுகிறது.
இவை தவிர கூண்டு மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு மற்றும் இதர மீன்வள திட்டங்களுக்கும் கடன் அளிக்கப்படுகிறது. மீனவர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே இந்த கடன் அட்டையை பெறலாம். ஆதார் அட்டை, வங்கி கணக்கு நகல், புகைப்படம், மீனவர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, படகு இருந்தால் அதற்கான உரிமைச்சான்று நகல் ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும்.
இந்த கடன் அட்டை பெற்றவர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆவணங்களை காண்பித்து கடனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி அடமானம் இல்லாமல் தற்போது ரூ.1,60,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. அடமானத்தின் பேரில் ரூ.3,00,000/- பெறலாம். மத்திய அரசு உதவியுடன் குறைந்த வட்டியான 7 சதவீதம் வட்டியில் கடன் பெறுவது இதன் மூலம் மீனவர்களுக்கு சாத்தியமாகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவில் வங்கிக் கடனை திரும்பச் செலுத்திடும் மீனவர்களுக்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மத்திய அரசு 2 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்கிறது. தொடக்க மீனவர் கூட்டுறவு சங்கங்களில் 7 சதவீத வட்டியில் மத்திய அரசு பங்களிப்பு 3 சதவீதத்தோடு, ஊக்கத் தொகையாக 3 சதவீதம் தள்ளுபடியும் பெற்று மீனவர்கள் பயனடைய முடியும். கிசான் கடன் அட்டை பெறுவதற்கு அருகில் உள்ள மீன்வளம் மீனவர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT