Published : 17 Dec 2017 12:31 PM
Last Updated : 17 Dec 2017 12:31 PM
செ
ன்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள் ளது ‘செயின்-சிஸ்’ என்ற மென்பொருள் நிறுவனம். அங்கு பணியாற்றும் சச்சிதானந்தம் என்ற இளைஞர், ‘தி இந்து’வை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது எவ்வளவு அவசியம் என்பதை ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகள் மூலம் தெரிந்துகொண்டோம். எங் கள் நிறுவன ஊழியர்கள் இணைந்து, ‘தி இந்து’ தமிழ் முன்னிலையில், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 5,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3.20 லட்சம்) நன்கொடை வழங்க விரும்புகிறோம்” என்றார்.
ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எஸ்.ராமலிங்கம், தன்னார்வலர் சிவா ஆகியோருடன் செயின்-சிஸ் (CHAIN-SYS) அலுவலகத்தை அடைந்தபோது, அந்த நிறுவனத்தில் நிர்வாகம், நிதி, மனிதவளம் ஆகிய பிரிவுகளில் அதிகாரிகளாகப் பணியாற்றிவரும் எஸ்.சச்சிதானந்தம், ஏ.பாலமுருகன், ஏ.ஆர்.ஜெகன், எம்.எஸ்.சதீஷ் ஆகியோர் 300 ஊழியர்களுடன் வரவேற்றனர்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் 5,000 அமெரிக்க டாலருக்கான காசோலையை எஸ்.ராமலிங்கத்திடம் செயின்-சிஸ் ஊழியர்கள் வழங்கினர். நிகழ்வில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
எஸ்.ராமலிங்கம்: ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தாமாகவே முன்வந்து நன்கொடை அளித்திருக்கும் முதல் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என்ற வகையில் நீங்கள் பாராட்டுக்கு உரியவர்கள். உலகின் முதல் தர பல்கலைக்கழகமான ஹார்வர்டில் உலகின் மூத்த மொழியாகிய நம் தமிழுக்கு மட்டும்தான் இருக்கை இல்லை. அதை அடைந்துவிட்டால், தமிழின் இலக்கிய வளம் முழுவதும் அங்கு ஆய்வு செய்யப்பட்டு அவை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தால் ஆங்கில மொழியிலும் பதிப்பிக்கப்படும். அதன்மூலம் பிறமொழி பேசும் மக்கள், நமது பண்பாடு, வரலாறு, கலைகள், மரபுவழி மருத்துவம் ஆகியவற்றை அறிந்துகொள்வதோடு ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், தமிழகம் வந்தும் தமிழைக் கற்க முன்வருவார்கள்.
ஏ.ஆர்.ஜெகன்: மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆர்.கணேசனை இயக்குநராகவும் ஆர்.மேகலையை நிர்வாக இயக்குநராகவும் ஆர்.சுந்தரமுருகனை தலைவராகவும் கொண்டு அமெரிக்காவின் லேன்சிங் நகரில் 1998-ல் செயின்-சிஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் பல நாடுகளில் பல கிளைகளுடன் செயல்படுகிறது. ஆசியாவின் தலைமை அலுவலகமாக செயல்படும் சென்னை அலுவலகத்தில் 700 பேர் பணியாற்றுகின்றனர்.
தமிழ்வழியில் படித்த பலர் இங்கு பணிபுரிகின்றனர். எங்கள் ஊழியர்களுக்கான பேருந்தில் நிறுவனத்தின் பெயரை தமிழில் தான் எழுதவேண்டும் என்று நிறுவனர்கள் பிடிவாதமாக இருப்பவர்கள். பேருந்துகளில் திருக்குறள் எழுதியிருக்கிறோம். இந்த தமிழ்ப் பற்றும், ஆர்வமும்தான் தற்போது நிதி வழங்கும் தூண்டுதலை ஏற்படுத்தியது.
ஏ.பாலமுருகன்: ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு இன்னும் ரூ.8 கோடி மட்டுமே தேவை. எங்களைப் போல, தமிழகத்தின் அனைத்து மென்பொருள் நிறுவனங்களின் நிர்வாகிகள், ஊழியர்களும் கைகோத்தால், அந்த இலக்கை எளிதாக எட்ட லாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் http://harvard tamilchair.org/donate என்ற இணையதளத்துக்கு சென்று நேரடியாகவும் செலுத்த லாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT