Published : 28 Aug 2023 10:27 PM
Last Updated : 28 Aug 2023 10:27 PM
கோவை: நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதை, பயிற்சி அளிப்பதை விட்டுவிட்டு, ஒவ்வொரு முறையும் அவர்களை திமுகவும், அக்கட்சியின் அமைச்சர்களும் தற்கொலைக்கு தூண்டுன்றனர் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மீனவர் சமுதாய நல கூடத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான தனி நபர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற பிறகு அங்கு கட்சியின் செயல்பாடுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பயணம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு உற்சாகம், புத்துணர்வை அளிக்கும். கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் ஆழ்துளை கிணறு அமைக்க, வீடு கட்ட தனியாக பணம் வசூல் செய்கிறார்கள். கோவை மாநகராட்சி பகுதிகளில் லஞ்சம் கேட்டால், பொது மக்கள் புகார் அளிக்க உதவி எண் தொடங்க முடிவு செய்து உள்ளோம். அதற்கான தொடர்பு எண் இரண்டு நாளில் அறிவிக்கப்படும். யார் பணம் கேட்டு மிரட்டினாலும் பொதுமக்கள் அதில் புகார் தெரிவிக்கலாம்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததுபோல அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுக்க வேண்டும். அப்படி அறிவித்தால் நானே முகாம்களில் அமர்ந்து அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை பெற்றுத் தருவேன்.
பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள், யாரெல்லாம் இன்னும் கைகோர்க்க போகிறார்கள் என்பது டிசம்பர் மாதத்துக்குள் தெரியும். இன்னும் எத்தனை புது நண்பர்கள் எங்களுக்கு கிடைக்கிறார்கள் என்பதை பாருங்கள். அதிமுக, பாஜக கூட்டணியில் முரண்பாடு இல்லை.
நீட் விஷயத்தில், தமிழகத்தில் இருக்கும் அனைவரும் போராட வருமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை தூண்டுகிறார். நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதை, பயிற்சி அளிப்பதை விட்டுவிட்டு, ஒவ்வொரு முறையும் அவர்களை திமுகவும், அக்கட்சியின் அமைச்சர்களும் தற்கொலைக்கு தூண்டுன்றனர். போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கை வேண்டியது இந்த அமைச்சர்கள் பெயர்களைதான். அதிமுக நீட்டை எதிர்த்தாலும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். ஆனால் திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இது என்ன அநியாயம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT