Published : 28 Aug 2023 02:45 PM
Last Updated : 28 Aug 2023 02:45 PM
புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு மதுக் கடத்தப்படுவதை தடுக்க விழுப்புரத்தில் உள்ள 9 சோதனைச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு எஸ்பி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
தமிழகத்தை ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவு. அத்துடன் பல ரகங்களில் மது விற்பனையாகிறது. மேலும் சாராயம் மற்றும் கள்ளுக் கடைகளும் அதிகளவில் உள்ளன. அத்துடன் புதுச்சேரியும், தமிழகத்தின் எல்லைப் பகுதியும் ஒருங்கிணைந்து இருக்கும். சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் இருக்கும் மதுவை வாங்கிச் செல்கிறார்களா என்பதை கண்காணிக்கவும்,
புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு மதுக் கடத்தலை தடுக்கவும் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் வழிகளில் 9 சோதனைச் சாவடிகள் மது விலக்கு அமலாக்கப் பிரிவால் அமைக் கப்பட்டுள்ளன. அண்மையில் மரக்காணத்தில் விஷச் சாராயம் சாப்பிட்டு பலரும் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் புதுச்சேரியில் இருந்து விஷச் சாராயம் வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சோதனைச் சாவடிகளை பலப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக விழுப்புரம் காவல்துறை எஸ்பி ஷசாங்க் சாய் கூறுகையில், “புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக தமிழகத்துக்கு வரும் வாகனங்களை சோதனையிட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில்9 சோதனைச்சாவடிகள் உள்ளன. அங்கு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை எஸ்பிஅலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள் ளன. இந்த சிசிடிவி செயல்பாட்டு கேமராக்கள் அனைத்தும் எஸ்பியின் கீழ் செயல்படும் சிறப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளன.
சிசிடிவி கேமராக்கள் இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வரும். இது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். சமீபகாலமாக மதுக்கடத்தல் குறைந்தாலும், சோதனைச் சாவடிக ளில் போலீஸார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மது மற்றும் சாராயக்கடத்தலை முற்றிலும் கட்டுப்படுத்த மதுவிலக்கு அமலாக்கபிரிவு சோதனைச் சாவடிகளில் நியமிக்கும் போலீஸார் தொடர்ந்து மாற்றப்படுகின்றனர்.
எந்த போலீஸாரும் இச்சோதனை சாவடிகளில் நிரந்தரமாக நியமிக் கப்படுவது இல்லை. எப்போது மாற்றப்படுவார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியாது. மேலும் சோதனைச் சாவடிகளில் நியமிக்கப்படும் போலீஸார் இதற்கு முன்பாக மது விலக்கு அமலாக்கப் பிரிவில் பணி புரிந்தவர்களாக இல்லாமல் இருக்கும் வகையில் நியமிக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT