Published : 28 Aug 2023 02:28 PM
Last Updated : 28 Aug 2023 02:28 PM

சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை விஜயலட்சுமி

சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "2011-ல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில் பிரிவு 420-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மேல் நடவடிக்கைக்காக நான் முயற்சித்தேன்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் மூலம் சீமான் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, என்னை ஊர் அறிய திருமணம் செய்துகொண்டு மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் கொண்டு வாழ்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதை நம்பி, அந்த வழக்கில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதி கொடுக்கவில்லை. ஆனால் சீமான் அவ்வாறு செய்யவில்லை.

எனவே, காவல் ஆணையரகத்தில் இன்று இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறேன். 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசராணை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளேன். அதேபோல், தற்கொலை முயற்சி வழக்கு, இது தவிர புதிதாக புகார் ஒன்றையும் கொடுத்துள்ளேன். என்னுடைய புகாரின் மீது தற்போதுள்ள திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான், என்னுடைய வாழ்வும் சாவும் அடங்கியிருக்கிறது. சீமான் இன்று காலையில்கூட சொல்லியிருக்கிறார், அவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று.

இப்படிப்பட்ட தலைவர் ஒருவர், நாம் தமிழர் என்றொரு கட்சியை நடத்திவருகிறார் என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனக்கு இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல முடியவில்லை. இதில் எனக்கு முழு ஒத்துழைப்பை வீரலட்சுமி கொடுத்து வருகிறார். ஊடகங்களால்தான் நான் உயிருடன் இருக்கிறேன். வீரலட்சுமி போல, சீமானால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது எனக்கு உதவி செய்ய முடியும் என்றால், உங்களுடைய ஆதரவை எனக்கு தாருங்கள். 2011-ம் ஆண்டே சீமானை கைது செய்ய வேண்டியது. ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் இன்னும் கைதாகவில்லை. எனவே, சீமானை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டிருக்கிறேன்.

முன்னதாக, சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தை பேசாமல் நிறுத்திவைத்திருந்தோம். இப்போது அவர் திருமணம் செய்யவில்லை. கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். மதுரை செல்வம் மூலம் ஒரு கோடி ரூபாய் எனக்கு கொடுத்துள்ளதாக கூறுவது மிகப் பெரிய விஷயம். எனவே, அவரை கைது செய்யாமல் விட்டதுதான் பெரிய தவறு. என்னுடைய பிரச்சினையில் அதிமுக அரசு பெரிய அளவில் விசாரணை நடத்தவில்லை. என்னிடம் தான் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்களே தவிர, சீமானிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. ஈழத்துக்கு ஆதரவாக சீமான் பேசியதால், அதிமுக அவருக்கு ஆதரவளித்தது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x