Published : 28 Aug 2023 08:30 AM
Last Updated : 28 Aug 2023 08:30 AM

சும்மா கிடக்கும் அம்மா குடிநீர் மையங்களை தாரை வார்த்த மாநகராட்சி: தாகம் தீர்க்குமா குடிநீர் வாரியம்?

மூடிக்கிடக்கும் அம்மா குடிநீர் மையம்.

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் ஏழை மக்களுக்காக எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீரை வழங்கும் திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடங்கிவைத்தார். அத்திட்டத்தின்படி 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களை திறந்தார். அங்கு, தனியார் கேன் குடிநீருக்கு இணையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

இந்த அம்மா குடிநீர் மையங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 400 பயனாளி குடும்பங்கள் பயன்பெற்று வந்தன.அவ்வாறு 50 மையங்களிலும் தினமும் 20 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற்று வந்தன. இத்திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு, நாளொன்றுக்கு 20 லிட்டர் வீதம் மொத்தம் 4 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

இதை பெற, பயனாளிகளுக்கு மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் கார்டும் வழங்கப்பட்டது. இவற்றுக்கான நீராதாரம் சென்னை குடிநீர் வாரியம் மூலமாக பெறப்பட்டது. இந்த குடிநீர் மையங்களில் 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற வேண்டுமெனில் தோராயமாக 1 லிட்டர் நீர் கழிவாக வெளியேறும்.

50 மையங்களிலும் தினமும் 4 லட்சம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, தினமும் சுமார் 4 லட்சம் லிட்டர் நீர் கழிவாக வெளியேற்றப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 3 ஆண்டுகளில் 29 கோடியே 16 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டம் குடிநீர் பற்றாக்குறை நிலவிய நிலையில், அதே அளவு நீர் கழிவாக வீணாக மழைநீர் வடிகாலில் விடப்பட்டது. இந்த நீரே கோடையில் கொசுக்கள் உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாகவும் இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு உச்சத்தில் இருந்தது. மாநகராட்சியின் பல பொதுக்கழிப்பிடங்கள் நீரின்றிமூடப்பட்டன.

மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பறைகளை பயன்படுத்த முடியவில்லை. 2015-ல் பெருவெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு மாநகர குடிநீர்விநியோகம் நாளொன்றுக்கு 850 மில்லியன் லிட்டராக இருந்த நிலையில், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம்525 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டது. அந்தஅளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. ரயில்மூலமாகவும் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில்
அம்மா குடிநீர் மையத்தில் இருந்து கழிவாக வெளியேறும் நீர்,
மழைநீர் வடிகாலில் விடப்பட்டது.

நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 180 மில்லியன் லிட்டர், வீராணம் ஏரியிலிருந்து 90 மில்லியன் லிட்டர் ,நெய்வேலி சுரங்கத்திலிருந்து 60 மில்லியன் லிட்டர், நெய்வேலியில் உள்ள 31 ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து 30 மில்லியன் லிட்டர், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம், பூண்டி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள தனியார் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 110 மில்லியன் லிட்டர், மாகரல் மற்றும் கீழானூர் பகுதிகளில் குடிநீர் வாரியம் அமைத்துள்ள 13 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 15 மில்லியன் லிட்டர் குடிநீர் மற்றும் கல் குவாரிகள் உள்ளிட்ட இதர நீராதாரங்கள் மூலமே, மாநகரின் தட்டுப்பாடு கால குடிநீர் தேவையான 525 மில்லியன் லிட்டரை பூர்த்தி செய்யவேண்டி இருந்தது.

இந்த நீராதாரங்கள் அனைத்தும் சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதை சமாளிக்க காவிரி ஆறு முதல், திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்ட நீராதாரங்களையே நம்பியிருக்க வேண்டி இருந்தது. இப்படி சென்னை முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய நிலையில், பொதுமக்கள் தங்கள் வீட்டுதரையை தூய்மைப்படுத்தவும், துணிகளை துவைக்கவும், கழிவறைகளுக்கு பயன்படுத்தவும் நீரின்றி சிரமப்பட்டனர்.

அப்போது, இந்த அம்மா குடிநீர் மையங்களில் இருந்து கழிவாக வீணாக வெளியேற்றப்பட்ட நீரை, சிரமப்பட்டு மழைநீர் வடிகாலுக்குள் சிறு பாத்திரங்களை நுழைத்து நீரை பிடித்து, வீட்டு புழக்கத்துக்கு பயன்படுத்திக் கொண்டனர். அதை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகராட்சி எந்த கட்டமைப்பையும் ஏற்படுத்தவில்லை.

மாநகராட்சியில் ஏராளமான பொறியாளர்கள் இருந்தும், நீர் தட்டுப்பாடு நிலவியபோது, மாநகராட்சி பள்ளி கழிப்பறை மற்றும் பொதுக் கழிப்பறைகளுக்கு தேவையான நீரை பெற சென்னை குடிநீர் வாரியத்தையே நம்பி இருந்தது. மாநகராட்சியின் நீர் தேவையை குடிநீர் வாரியத்தாலும் பூர்த்திசெய்ய முடியாத நிலை நீடித்தது. அதே நேரத்தில் அம்மா குடிநீர் மையங்களில் இருந்து தினமும் சுமார் 4 லட்சம் லிட்டர் நீரை மழைநீர் வடிகாலில் வீணாகசென்றது.

அம்மையங்களை அமைக்கும்போதே தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அந்த நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில் அம்மையங்களில் கட்டமைப்பை ஏற்படுத்த மாநகராட்சி தவறிவிட்டது. பின்னர் கரோனா பரவல் காலத்தில் இம்மையங்கள் பராமரிப்பின்றி மூடப்பட்டன.

தற்போது இம்மையங்களை மாநகராட்சி நிர்வாகம், சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது. இவ்வாரியமாவது, வீணாகும் நீரை மாநகராட்சியின் பொதுக்கழிவறை பயன்பாட்டுக்காவது பயன்படுத்த முன்வருமா, அம்மையங்களை மேம்படுத்த எடுக்க உள்ள நடவடிக்கைகள் என்ன என வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,

அவர்கள் கூறியதாவது: அனைத்து அம்மா குடிநீர் மையங்களையும் ஆய்வு செய்து, இப்போது எந்த நிலையில் இருக்கிறது, அவற்றை மேம்படுத்த தேவையான அம்சங்கள் என்ன, தினமும் எத்தனை லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியும். அங்கு வேறு என்ன மாற்றங்கள் செய்ய முடியும்,அதற்கான செலவீனம் எவ்வளவு என்பன குறித்து மதிப்பிட இருக்கிறோம். அதை மேம்படுத்தும்போது, கழிவாக வெளியேறும் நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவாக வெளியேறும் நீர் எத்தகையது, அதை எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: அம்மா குடிநீர் நிலையங்களில் நிலப்பரப்பு நீர் தான் பயன்படுத்தப்படுகிறது. அதில் கால்சியம், மக்னீசியம், சோடியம் போன்ற தாது பொருட்கள் உள்ளன. அந்த நீரை எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கும்போது, கழிவாக வெளியேறும் நீரில் தாது பொருட்களின் அடர்த்தி சற்று அதிகமாக இருக்கும்.

அந்த நீர் குடிக்க உகந்ததில்லை. ஆனால் அதை கழிவறைகளுக்கும், வீடுகளில் பாத்திரம், அறைகளை கழுவுவதற்கும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். அந்த நீருடன் சம அளவு சாதாரண நீரை கலந்தால், வழக்கமாக பயன்படுத்தும் நீருக்கு இணையான தன்மையை பெறும். அது சாக்கடை நீரைப் போன்று அசுத்தமானவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x