Last Updated : 28 Aug, 2023 08:09 AM

 

Published : 28 Aug 2023 08:09 AM
Last Updated : 28 Aug 2023 08:09 AM

கோயிலுக்கு வெளியே குடிகொண்ட சிவன்: நாயக்கர் கால 18-ம் நூற்றாண்டு கோயில் கண்டுபிடிப்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் தொல்லியல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதில், பல்வேறு அரிய சிலைகள் மற்றும் கல்வெட்டுகளை கண்டறிந்து வருகின்றனர். இந்நிலையில், சித்தாமூர் அடுத்த புத்தமங்கலம் கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், 18-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால சிவன் கோயில் மற்றும் 2 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வரலாற்று துறை பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான சி.சந்திரசேகர் கூறியதாவது: புத்தமங்கலம் கிராமத்தில் மேற்கொள்ளபட்ட ஆய்வில் சிவன் கோயில் மற்றும் கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளோம். ஊருக்கு வெளியே சுமார் 200-ல் இருந்து 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் காணப்படுகிறது. இக்கோயில், நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்பதை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கோயிலின் முன் மண்டபத்தின் மேல் பகுதியில் ஒரு கல்வெட்டும், அதேகல்லின் அடிப்பகுதியில் மற்றொரு கல்வெட்டும் தென்படுகிறது. மேலும், தமிழ் எழுத்துக்கள் தெளிவாக காணப்படுவதால் இது பிற்கால நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என கூறலாம். கல்வெட்டானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் கலந்து எழுதப்பட்டுள்ளது. முதல் கல்வெட்டானது, நான்கு வரிகளை கொண்டதாக காணப்படுகிறது.

முதல் வரியில் கொமரப்ப நாயக்கர்ராஜா என்றும் இரண்டாவது வரியில் காவல் சின்னத்தம்பி நாயக்கன் என்பவர் இக்கோயிலுக்கு ஊர்களை தானமாக அளித்தது குறித்தும்குறிப்பிடுகிறது. மேலும் இக்கோயிலுக்கு தீங்கு செய்பவர்கள் காராம் பசுவை கொன்றவர்கள் அடையக்கூடிய தண்டனை அடைவார்கள் போன்ற செய்திகளும் காணப்படுகின்றன.

எனினும், தமிழ் மற்றும் தெலுங்கில் எழுதப்பட்டுள்ளதால், தெலுங்கில் உள்ள வார்த்தைகளை படித்தறிய இயலவில்லை. எனவே, இக்கல்வெட்டின் முழு பொருளை அறிந்து கொள்ள இயலவில்லை.

கல்வெட்டின் மேல் சிம்மம் வரி வடிவமாக வரையப்பட்டுள்ளது. இதே கல்வெட்டு அமைந்துள்ள தூணின் அடிப்பகுதியில் மற்றொரு கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டில் வேலாயுதம் என்ற வார்த்தையுடன் தொடங்கி ஏழு வரிகள் காணப்படுகின்றன. இதுவும் தமிழ், தெலுங்கு கலந்து எழுதப்பட்டுள்ளன. இதில், மரண தண்டனை வழங்கப்படும் என்று கடைசி வரி குறிப்பிடுகின்றது. சற்று சிதைந்தும், தெலுங்கும் கலந்துள்ளதால் இக்கல்வெட்டில் முழுமையாக படிக்க இயலவில்லை.

இக்கோயில், ஒரு சிவன் கோயில் ஆகும். இது கந்தப்ப ஈஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இக்கோயில் செங்கற் கல்லால் கட்டப்பட்ட 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திராவிட மாடலை கொண்ட கோயிலாகும். இக்கோயில் இருந்த சிவலிங்கம், கோயில் சேதமடைந்ததால் கோயிலுக்கு வெளியே வைத்து பராமரிக்கப்படுகிறது.

மேலும், கல்லால் கட்டப்பட்டுள்ள முன் மண்டபத்தில் ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆமை, யானை, முனிவர், நடன பெண் மற்றும் வரிவடிவத்தில் புலி, கடவுள் உருவங்கள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. தற்போது, பெரிய ஆலமரம் ஒன்று கோயிலின் மீது வளர்ந்து நிற்பதால் கோயில் முழுவதுமாக சிதிலம் அடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுகிறது.

கோயிலின் கட்டிடங்கள், ஏராளமான கலை நுணுக்கங்களுடன் கூடிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முன்று புறமும் மாடக்குழிகள் அமைக்கப்பட்டு, அவற்றில் கடவுள் சிலைகள் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால்,தற்போது எந்த சிலையும் அங்கே காணப்படவில்லை. மேலும், இக்கோயிலில் உள்ள சிவபெருமான் மற்றும் அச்சரப்பாக்கத்தில் உள்ள சிவபெருமானும், திருவிழா காலங்களில் ஊருக்கு வெளியே இருக்கக்கூடிய இலுப்பை தோப்பு என்ற இடத்தில் சந்திப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரமேஷ்

இதுகுறித்து, கயப்பாக்கம் வரலாற்று ஆய்வாளர் ரமேஷ் கூறும்போது, வரலாற்று களஆய்வில் கண்டறியப்பட்டுள்ள கோயிலை பழமை மாறாமல் புனரமைப்பதன் மூலம், நாயக்கர் காலத்து நினைவுச்சின்னங்களையும், அக்கால கட்டிடக்கலை போன்றவற்றையும் பாதுகாக்க இயலும். ஊர் மக்கள் இக்கோரிக்கையை வலிறுத்துகின்
றனர். அதனால், தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் கோயிலை சீரமைக்க முன்வர வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x