Published : 28 Aug 2023 05:18 AM
Last Updated : 28 Aug 2023 05:18 AM

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 1.06 லட்சம் இடங்கள் நிரம்பின

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கியது.

முதலில் மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 775 இடங்கள் நிரம்பின. இதையடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 28-ல் தொடங்கியது. முதல் 2 சுற்றுகள் முடிவில் 56,837 இடங்கள் நிரம்பியுள்ளன.

இதைத் தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ல் தொடங்கி 26-ம் தேதி நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 5,975 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 74,251 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் 60,967 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. அவற்றை உறுதி செய்த 49,029 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரிவு, பொது கலந்தாய்வின் 3 சுற்றுகள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 6,641 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 50,737 பொறியியல் இடங்கள் நிரம்பாமல் காலியாகஉள்ளன.

அதேநேரம், கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 92,102 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதனுடன் ஒப்பிடும் இந்தாண்டு சேர்க்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து காலியிடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதன்பின் எஸ்சிஏ காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11-ம் தேதியில் நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x