Published : 28 Aug 2023 05:14 AM
Last Updated : 28 Aug 2023 05:14 AM
சென்னை: படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இவற்றை படிப்படியாக இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிக வேகத்தில் இயங்கும் நவீன ரயிலாக வந்தே ரயில் திகழ்கிறது. இவை சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து, வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மெட்ரோ ரயில், படுக்கை வசதி கொண்ட ரயில், சரக்கு ரயில், புறநகர் ரயில் ஆகிய 4 வகைகளில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் 200 ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் நடப்பு நிதியாண்டுக்குள் சோதனை செய்யப்படும்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
முதல் ரயிலை ஐசிஎஃப் தயாரித்து, சோதனைகள் முடிந்த பிறகு, தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெறும். அந்த வகையில், 200 ரயில்களை தனியார் கூட்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ரஷ்யாவின் டிரான்ஸ் மெட்ரோமாஷ் ஹோல்டிங் (டிஎம்எச்) நிறுவனத்தின் துணை நிறுவனமான மெட்ரோமாஷ் வேகன் நிறுவனம் - ஆர்விஎன்எல் நிறுவனம் இணைந்து 120 ரயில்களையும், பிஎச்இஎல் - டிதாகர் வேகன்ஸ் நிறுவனங்கள் இணைந்து 80 ரயில்களையும் தயாரிக்க உள்ளன.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை 16, 20, 24 பெட்டிகள் என 3 வகைகளில் தயாரிக்கப்படும். இவை அனைத்திலும் தலா 4 இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி இருக்கும். மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள் முறையே 11, 15, 19 என்ற எண்ணிக்கையில் இருக்கும்.
இந்த ரயில்கள் வெள்ளை - நீல நிறத்தில் தயாராகும். மாடுகள் மோதி சேதமடைவதை தடுக்க, ரயிலின் முன்பகுதி வலுவானதாக மாற்றப்படும். ஒவ்வொரு படுக்கைக்கும் தனியே சார்ஜ் செய்யும் வசதி, புத்தகம் வாசிக்க சிறிய மின்விளக்கு வசதி ஆகியவை இடம்பெறும். ஐசிஎஃப் தயாரிக்கும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் மட்டும் அடுத்த ஆண்டு இயக்கப்படும். மற்ற ரயில்களை 2 ஆண்டுகளில் தயாரித்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT