Published : 28 Aug 2023 06:11 AM
Last Updated : 28 Aug 2023 06:11 AM
திண்டுக்கல்: ஓணம் பண்டிகை யை முன்னிட்டு திண்டுக்கல், நிலக்கோட்டை மலர் சந்தைகளில் பல வகையான பூக்களை டன் கணக்கில் கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் பூக்கள், திண்டுக்கல், நிலக்கோட்டை சந்தைகளில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆக.29-ல் கொண்டாடப்படுகிறது. இதனால், கேரளாவில் திருவிழா களைகட்டியுள்ளது. இதற்காக திண்டுக்கல், நிலக்கோட்டை மலர் சந்தைகளில் பல்வேறு வகையான பூக்களை கேரள வியாபாரிகள் டன் கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.
ஓணம் தொடங்கியது முதல் திண்டுக்கல் மலர் சந்தையிலிருந்து தினமும் 5 டன் வாடாமல்லி பூக்கள் மற்றும் 2 டன் பிற வகையான பூக்கள் லாரிகள் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் திண்டுக்கல், நிலக்கோட்டை மலர் சந்தைகள் கடந்த சில தினங்களாக களைகட்டி வருகின்றன.
நிலக்கோட்டை மலர் சந்தையிலிருந்து மட்டும் 6 டன் மல்லிகைப் பூக்களை கேரள வியாபாரிகள் நேற்று வாங்கிச் சென்றனர். இதனால், மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனையானது. அதிக விலைக்கு விற்பனை நடந்ததால், பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அத்தப்பூ கோலம்: மேலும், அத்தப்பூ கோலமிட வாடாமல்லி, கனகாம்பரம், ஜாதிப்பூ, செவ்வந்திப் பூ, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களையும் டன் கணக்கில் கேரள வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
சந்தைக்கு வந்த பூக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. எவ்வளவு பூக்கள் வந்தாலும் அனைத்தையும் வாங்கிச் செல்லும் மனநிலையில் கேரள வியாபாரிகள் தயாராக இருந்தனர். அந்த அளவுக்கு கேரளாவில் பூக்களின் தேவை ஓணம் பண்டிகையால் அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT