Last Updated : 28 Aug, 2023 08:02 AM

1  

Published : 28 Aug 2023 08:02 AM
Last Updated : 28 Aug 2023 08:02 AM

“மருத்துவர்களுக்கு மருந்து நண்பர்கள்தான்!” - ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது விழாவில் அமைச்சர் மா.மதிவேந்தன் பகிர்வு

படம்: ஜெ.மனோகரன்

கோவை: மருத்துவர்களுக்கு மருந்து நண்பர்கள்தான் எனவும், நண்பர்களை என்றைக்குமே நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும், அர்ப்பணிப்போடும் செய்துவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த இரண்டாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மூன்றாவது ஆண்டாக டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை – மருத்துவ நட்சத்திரம்- 2023’ விருதுகள் வழங்கும் விழா கோவை, சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஐஎம்ஏ அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், யுனைடெட் எஜுகேஷனல் அண்ட் சோஷியல் வெல்ஃபர் டிரஸ்ட் ஆகியவை இணைந்து இவ்விழாவை நடத்தின.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 38 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது மற்றும் 5 மருத்துவர்களுக்கு ‘முன்மாதிரி மருத்துவர்’ விருதை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கி கவுரவித்தார். விழாவில், அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியதாவது: சில நேரங்களில் ஒருநாள் விடுப்பு கிடைக்காதா என்ற எண்ணம் மருத்துவர்களுக்கு ஏற்படும்.

சரியான நேரத்தில் உணவுகூட உட்கொள்ள முடியாது. தங்களை வருத்திக்கொண்டு மருத்துவர்கள் சேவையாற்றுகின்றனர். நோயாளிகளின் நோய்க்கு ஏற்ப, மருந்துகள் அளித்து மருத்துவர்கள் குணப்படுத்துகின்றனர். மருத்துவர் களுக்கு மருந்து நண்பர்கள்தான். இப்போதும், எனக்கு ஏதும் மன அழுத்தம் இருந்தால் நான் முதலில் அழைப்பது நண்பர்களைத்தான்.

அவர்களிடம் பேசியபிறகு மனம் அமைதியாகிவிடும். எனவே, உங்களுடைய நண்பர்களை என்றைக்குமே நெருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப் போது அவர்களை சந்தியுங்கள். அப்படி இருந்தால், நீங்கள் மேலும் சிறப்பாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவ மனைகளில் என்றாவது ஒரு நாள், ஏதோவொரு காரணத்தால், இக்கட்டான சூழலை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

அந்த சூழலில் பொறுமை இழந்தால், பிரச்சினை பெரிதாகிவிடும். பணம், பெயர் இதில் எது முக்கியம் என்றால், பெயர்தான் முக்கியம் என்பேன். பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், ஒருமுறை இழந்த பெயரை மீட்பது கடினம். கட்டணத்தை குறைக்குமாறு இயலாத நோயாளிகள் யாரேனும் கேட்டால், அவர்களுக்கு மனதார கட்டணத்தை குறைத்துக்கொண்டு, உங்கள் சேவையை தொடருங்கள்.

நாம் செய்யும் சேவை, என்றைக்கு நமக்கு திருப்பி பலன் அளிக்கும் என்றே தெரியாது. அதைவிட பலமடங்கு இயற்கையும், இறைவனும் உங்களுக்கு திருப்பி அளிப்பார்கள். மருத்துவ நட்சத்திரம் விருது வழங்கும் நிகழ்வானது எனக்கு மிகுந்த மன நிறைவளிக்கும் நிகழ்வு. இவ்வாறு அவர் பேசினார்.

‘இந்து தமிழ் திசை' நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் பேசும்போது, “நடப்பாண்டு மருத்துவ நட்சத்திரம் விருது வழங்கும் நிகழ்வில், முன்மாதிரி மருத்துவர் விருதையும் சேர்த்துள்ளோம். மருத்துவப் பணியை தாண்டி, ஊடகங்கள் வழியாக எழுத்து, பேச்சு, கலைகள் மூலம் சுகாதாரம், மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை பரப்புவதில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு இந்த விருதை வழங்குகிறோம்.

தெளிவான தமிழில் மருத்துவர்கள் எழுதும் கட்டுரைகளும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அது போன்ற மருத்துவர்களை கவுரவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம்” என்றார். ‘இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் டி.ராஜ் குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x