Last Updated : 26 Dec, 2017 04:21 PM

 

Published : 26 Dec 2017 04:21 PM
Last Updated : 26 Dec 2017 04:21 PM

ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவில் கோயிலில் பூஜை: ஆகம விதிமீறல் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! - அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்குமா?

திருப்பதி உள்ளிட்ட கோயில்களில், வரும் ஜனவரி 1-ம் தேதியான ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகளோ விசேஷ பூஜைகளோ செய்யப்படமாட்டாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இது நல்ல முடிவுதான். ஆங்கிலப் புத்தாண்டு எனும் பெயரில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் செய்வது ஆகம விதிகளுக்கே எதிரானது என்கிறார்கள் என்று ஆந்திர மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் தெரிவிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாக, ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதி பிறப்பதை முன்னிட்டு, முந்தைய நாள் நள்ளிரவில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதும் வழிபாடுகள் நடத்துவதும் அதிகரித்து வருகின்றன. வருடத்தின் முதல் நாள் வழிபட்டு, பிரார்த்தனை செய்தால், அந்த வருடம் முழுவதும் ஒரு குறைவும் இல்லாமல், சீரும் சிறப்புமாக வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை; ஆசை; வேண்டுதல்!

ஒருவகையில் இது நல்லவிஷயம்தான். புத்தாண்டு தொடங்கியதும் காலையில் எழுந்து, கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அப்போது நம் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளலாம். ஆனால் இப்போது வந்திருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, ஆண்டாண்டு காலமாக உள்ள ஆகம விதிகளை மீறுவது நியாயமே இல்லை என்று வருத்தப்படுகிறார்கள் சிவாச்சார்யர்கள்.

''வேதங்களையெல்லாம் நமக்கு வகுத்துக் கொடுத்தவர் வேதவியாஸர். அவர் வழி வந்த சிஷ்யர்கள், பின்னாளில் வேதப் பிரிவுகளை இன்னும் விரிவாகவும் அழகாகவும் தெளிவாகவும் நமக்குத் தந்தருளினார்கள். ஸ்லோகங்களை எல்லா தருணங்களிலும் சொல்லிவிட முடியாது. சொல்லவும் கூடாது. இப்படி ஸ்லோகங்களைச் சொல்லவே பல நியமங்கள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஆண்டவன் உறைந்திருக்கும் ஆலயத்தை நம் இஷ்டத்துக்கு நள்ளிரவில் திறப்பதெல்லாம் ஆகம விதிகளுக்கு எதிரான செயல்'' என்று சொல்லி ஆதங்கப்படுகிறார் சென்னை அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

வேதங்களைப் போலவே, ஆலயங்களுக்கும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை ஆகமங்கள் என சொல்லப்படுகின்றன. இவற்றில் பல வகைகள் இருக்கின்றன. இந்த ஆகமங்களை, பன்னெடுங்காலம் தபஸில் ஈடுபட்டிருந்த ரிஷிகள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

அவர்கள் அமைத்துக் கொடுத்த ஆகமங்களின்படி மன்னர் பெருமக்கள் ஆலயங்களைக் கட்டினார்கள். ஆலய பூஜைகளை நிர்மாணித்தார்கள். அதற்கான நிவந்தங்களை அளித்தார்கள். நிலங்களை வழங்கினார்கள். அந்த ஆகமங்களின்படியே, இன்றைக்கும் ஆலயங்களும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன என்கிறார்கள் கோயில் அலுவலர்கள்.

''கோயிலில் திருவிழா வரும். அப்போது உத்ஸவர் ஊர்வலமாக வருவார். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மூலவரைத் தரிசிக்க முடியாது. நடை சார்த்தப்பட்டிருக்கும். உத்ஸவரை மட்டுமே தரிசிக்கலாம். அர்த்தஜாம பூஜை இத்தனை மணிக்கு நடக்கவேண்டும் என்று அந்தந்தக் கோயிலுக்கு விதிக்கப்பட்டிருப்பது போல் செய்தாக வேண்டும். அதை மீறுவது, ஆகமத்தையே மீறுவதாகும்'' என்கிறார் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் பாஸ்கர குருக்கள்.

''உலகம் முழுவதும் உள்ள ஆலயங்கள் பொதுவாகவே ஆகம விதிகளின்படியே பூஜைகள் செய்யப்படுகின்றன. இன்னொரு விஷயம். எல்லாக் கோயில்களிலும் இரவு 8 முதல் 9 மணிக்குள் நடை சார்த்தப்படுவது வழக்கம். ஆனால் தில்லையம்பதி என்று சொல்லப்படும் சிதம்பரத்தில் மட்டும் இரவு 10 முதல் 10.30 மணிக்குதான் நடை சார்த்தப்படும். அதாவது உலகில் உள்ள அத்தனை தெய்வங்களும் நடை சார்த்தியதும் இங்கே சிதம்பரம் தலத்துக்கு வந்து அர்த்தசாம பூஜையில் கலந்து கொள்வதாகவும் ஐதீகம்'' என்கிறார் சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர்.

''இன்னொரு விஷயம்... வருடத்தில் மார்கழியில், காலையில் நடை சீக்கிரமே திறக்க வேண்டும் என்றும் ஆகமம் சொல்கிறது. அதேபோல் இரவில் நடை திறந்து, பூஜைகள் நடைபெறுவதற்கு உரிய நாளையும் ஆகமம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அதாவது மகா சிவராத்திரி நன்னாளில் மட்டும், இரவில் நான்கு கால பூஜைகள் நடைபெறவேண்டும் என்பது ஆகம விதி. இதைத் தவிர, இரவில் எந்தநாளிலும் இரவில் பூஜைகள் செய்வது என்பது ஆகம விதிகளை மீறிய செயலாகும்'' என்கிறார் கதிராமங்கலம் அருகில் உள்ள சிவராமபுரம் கணேஷ் சிவாச்சார்யர்.

''மொத்தம் 28 ஆகமங்கள் உள்ளன. இதற்கு உப ஆகமங்களாக, நூற்றுக்கணக்கானவை உள்ளன. அவை நமக்குக் கிடைக்கவில்லை. வைஷ்ணவத்திலும் இரண்டு ஆகமங்கள் இருக்கின்றன. சைவம், வைணவம் என எந்த ஆகமங்களிலும் நள்ளிரவு பூஜையை அனுமதிக்கவே இல்லை'' என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

காமிகாமத்தில், 21வது படலத்தில், ஆலயப் பிரவேச ரத்னம் என்று ஒரு பகுதியே உள்ளது. இதில் காலை உஷத்கால பூஜை தொடங்கி, இரவில் அர்த்தஜாம பூஜை வரை எப்படிச் செய்யவேண்டும், எப்போது செய்யவேண்டும், எதற்குள் செய்ய வேண்டும் என்று விரிவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்கிறார் கணேஷ் சிவாச்சார்யர்.

திருப்பதி திருத்தலம், பக்தர்களுக்குச் செய்யப்படும் வசதி, தூய்மை, தங்கும் இடங்கள் முதலான பல விஷயங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஒப்பற்ற தலம். இந்தத் தலத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழகத்தில் உள்ள ஆலயங்களையும் சுத்தமாக வைத்திருக்கவும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கவும் பிரசாதங்களை எல்லோரும் வாங்கிச் செல்லும் வகையில் நடைமுறைப்படுத்தவும் இந்துசமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொண்டு, நல்ல திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக் கொள்ளலாம். காலையில் எழுந்து, கோயிலுக்குச் சென்று வழிபடலாம். டிசம்பர் 31-ம் தேதி இரவில் இருந்து நடையைத் திறந்துவைத்து, விசேஷ தரிசனம், சிறப்பு பூஜை என்று ஆகமங்களில் இல்லாத விஷயங்களைச் செயல்படுத்தும் கோயில்கள் மீதும், ஊழியர்கள் மீதும் தமிழக அரசும் இந்துசமய அறநிலையத் துறை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

இதோ... புத்தாண்டுக்கு... ஆங்கிலப் புத்தாண்டுக்கு, இன்னும் நான்கைந்து நாட்களே உள்ளன. நள்ளிரவு பூஜையை, ஆகம விதிகளைத் தாண்டி நடக்கிற வழிபாட்டை, அறநிலையத் துறை தடுக்குமா. ஆகம மீறல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமா என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x