Last Updated : 19 Dec, 2017 11:56 AM

 

Published : 19 Dec 2017 11:56 AM
Last Updated : 19 Dec 2017 11:56 AM

வண்டல் மண் எடுக்க கட்டுப்பாடு நீக்கம்: பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் பானைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மண்பாண்டக் கலைஞர்கள் வசிக்கின்றனர். மண்பாண்டத் தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருள் வண்டல் மண். கடந்த சில ஆண்டுகளாக வண்டல் மண் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், தேவையான மூலப்பொருள் கிடைக்காமலும், உழைப்புக்கேற்ற வருமானம் இல்லாததாலும் பிழைப்புக்காக பாரம்பரிய தொழிலை விட்டு பலரும் மாற்று வேலைகளுக்கு சென்றுவிட்டனர்.சிலர் மட்டும் இத்தொழிலை செய்து வருகின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை வரும் தைப்பொங்கல் விற்பனையும், அவ்வப்போது ஆர்டர் கிடைக்கும் களிமண் சிற்பங்கள் மூலமாகவும் மட்டுமே வருவாய் கிடைத்து வருகிறது. பொங்கல் பானைகள், குடிநீர் பானைகள், கார்த்திகை விளக்குகள், பூவோடுகள், தீர்த்தக்குடங்கள், பூந்தொட்டிகள், பள்ளிக் குழந்தைகளுக்கான பூ ஜாடிகள், மண் உருவாரங்கள், திருமண சீர் வரிசை பானைகள் ஆகிய மண்பாண்டங்களின் வகைகள் உள்ளன.

கடந்த மே மாதம் தமிழக அரசு நீர் நிலைகளை தூர்வார அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, விவசாயிகள் பலர் திருமூர்த்தி, அமராவதி அணைகளிலும், 100-க்கும் மேற்பட்ட குளங்களில் இருந்தும் பல லட்சம் லாரிகளில் வண்டல் மண் ஏற்றிச் சென்றனர். அப்போது மண்பாண்டக் கலைஞர்களுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்கள் தேவையான வண்டல் மண்ணை சேகரித்தனர்.

தற்போது, தைப்பொங்கலுக்காக பொங்கல் பானைகள் உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மண்பாண்டக் கலைஞர் கே.குப்புசாமி கூறும்போது, ‘எனக்கு 56 வயதாகிறது. 9 வயதில் இருந்து இத்தொழில் செய்து வருகிறேன். பாடுபடுகிற அளவுக்கு பலன் கொடுக்குற தொழில்தான்.

கடந்த 2 ஆண்டுகளாக மழையின்மை, மூலப்பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் இத்தொழில் முற்றிலுமாக முடங்கியது. தற்போது மண் எடுப்பதில் கட்டுப்பாடு நீங்கியதும், ஓரளவு மழை பெய்திருப்பதும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பானை உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதற்காக, இப்போதே உற்பத்தியில் ஈடுபட தொடங்கிவிட்டோம். கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ, ஒன்றரை கிலோ என பொங்கல் பானைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் விலை முறையே ரூ.40, ரூ.70, ரூ.100, ரூ.120 என இருக்கும். பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையோரங்களில் கடை விரித்து விற்பனை நடைபெறும்.

ஆனால், விழாக் காலங்களில் போலீஸார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கட்டுப்பாடு விதிப்பதால் கடை விரிக்க முடியாத நிலையும், வருவாய் இழப்பும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடை விரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x