Published : 22 Jul 2014 12:00 AM
Last Updated : 22 Jul 2014 12:00 AM
தமிழகத்தில் மின் தேவையை சமாளிப்பதற்காக 9 புதிய அனல்மின் திட்டங்கள், சுமார் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மின் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் நத்தம் விசுவநாதன் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
வரும் காலத்தில் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல்வேறு புதிய மின் திட்டங்களை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.5 ஆயிரம் கோடி. கட்டுமான பணிக்கான ஏற்பு கடிதம் கடந்த மே 30-ம் தேதி ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2017-ல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அனல் மின்திட்டம் மூலம் தலா 660 மெகாவாட் கொண்ட 2 அலகுகள் அமைக்கப்பட உள்ளன. திட்ட மதிப்பீடு ரூ.8,391 கோடியாகும். இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு ஆய்வில் உள்ளன. இந்த திட்டம் 2018-19ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் 800 மெகாவாட் திறன் கொண்ட 3-வது அலகு, ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ளது. ஆய்வுப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இது 2019-20ல் செயல்பாட்டுக்கு வரும்.
எண்ணூர் மாற்று அனல் மின்திட்டமாக ஏற்கெனவே உள்ள பழைய அனல் மின்நிலையத்துக்கு (450 மெகாவாட்) பதிலாக 660 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவும் 2019-20ல் செயல்படத் தொடங்கும்.
தலா 660 மெகாவாட் திறனுடன் 2 அலகுகளைக் கொண்ட உடன்குடி அனல் மின்திட்டம், நிலக்கரி இறக்கு தளத்துடன் ரூ.10,121 கோடியில் அமைக்கப்பட உள்ளது. உப்பூர் அனல் மின்திட்டத்தில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள், ரூ.9,600 கோடியில் அமையவுள்ளன. அதேபோல உடன்குடி விரிவாக்கத் திட்டத்தில், தலா 660 மெகாவாட் கொண்ட 2 அனல் மின்நிலையங்கள் ரூ.7,920 கோடியில் அமைக்கப்பட உள்ளன. உடன்குடி மின்திட்டம் நிலை 3-ல் தலா 660 மெகாவாட் கொண்ட 2 மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இவை மட்டுமின்றி, மத்திய அரசின் மின் நிதிக்கழகம் மூலம் தனியார் பங்கேற்புடன் 4 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட செய்யூர் அனல் மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.25,970 கோடி முதலீட்டில் அமையவுள்ள இத்திட்டத்துக்காக தமிழக அரசால் 1,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் பங்காக 1,600 மெகாவாட் கிடைக்கும்.
சத்தீஸ்கரில் உள்ள ஒரு நிலக்கரி பகுதி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும், மகாராஷ்டிர மாநில சுரங்க நிறுவனத்துக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பெறப்படும் நிலக்கரி 77:33 எனும் விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி சுரங்கம் அருகிலேயே சுமார் 4 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்துக்கு 2,500 மெகாவாட் கிடைக்கும்.
குந்தா நீரேற்று மின்திட்டத்தின்கீழ், தலா 125 மெகாவாட் திறன் கொண்ட 4 மின்நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், சில்லஹல்லா நீரேற்று புனல் மின்திட்டத்தை இரண்டு பகுதிகளாக செயலாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT