Last Updated : 27 Aug, 2023 07:41 PM

3  

Published : 27 Aug 2023 07:41 PM
Last Updated : 27 Aug 2023 07:41 PM

ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி | 'அயோத்தி' திரைப்படம் பாணியில் செயலாற்றிய மதுரை அமைச்சர்கள், அதிகாரிகள்

மதுரை: மதுரை ரயில் தீ விபத்தில் பலியானவர்கள் உடல்கள் ஊருக்கு அனுப்பிவைப்பதற்காக அயோத்தி திரைப்படம் பாணியில் மதுரை அமைச்சர்கள், அதிகாரிகள் செயலாற்றினர்.

சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படத்தில் ராமமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தபோது, கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் அவரது கணவன், மகன், மகள் தவிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் உணர்வை பதிவு செய்து, பெண்ணின் உடல், குடும்பத்தினரை பத்திரமாக விமானத்தில் ஊருக்கு அனுப்பிய மனிதநேயம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் நேற்று முன்தினம் நடந்த ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள், உயிர் தப்பியவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மொழி தெரியாது, ஆன்மிக உணர்வுடன் மதுரைக்கு வந்த அவர்கள் விபத்தில் சிக்கிக் கொண்டனர். இது தொடர்பாக மதுரை மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல் பட்டதோடு, தமிழக அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் தனித்தனியே சம்பவ இடத்துக்குச் சென்றனர். மருத்துவமனைகளுக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். உடல்கள், உயிர் தப்பியவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புதல் போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆளும்கட்சி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் துரிதமாக ஈடுபட்டனர்.

சுற்றுலா வந்த இடத்தில் உறவினர்களின் உயிரிழந்து தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி அரவணைத்தது பாராட்டுக்குரிய செயலாக பார்க்கப் பட்டது. மேலும், சென்னையில் இருந்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்என். சிங்குடன் ஒரே விமானத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராசன் பயணித்து, விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் ஆறுதல் கூறினார். தொடர்ந்து ரயில்வே மருத்துவமனையிலும் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையில் இருந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தாமதம் இன்றி, சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோருக்கு இரு அமைச்சர்களும் ஆலோசனைகளை கூறி அறிவுறுத்தினர். இது மட்டுமின்றி இரவு 11 மணிக்கு பிணவறை பகுதியில் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள், அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் இதுபோன்ற செயல் மனிதநேயம், சகோதரத்துவத்தை காட்டுவதாகவே இருந்தது. திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜத்திலும் மதுரை சகோதரத்துவம் மிக்க, ஊர் என்பதை இச்சம்பவம் நிரூபித்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x