Published : 27 Aug 2023 06:45 PM
Last Updated : 27 Aug 2023 06:45 PM
சென்னை: மதுரையில் ரயில் பெட்டி தீவிபத்துக்கு காரணமானதாக கூறப்படும் சமையலர் உட்பட 5 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீஸார், ரயில்வே பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மதுரை ரயில் நிலையம் அருகே நேற்று நிறுத்தி இருந்த சுற்றுலா ரயில் பேட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. இப்பெட்டியில் பயணித்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்ட் மீது வழக்குப் பதிவு செய்தனர். ரயில்வே அதிகாரிகள் குழு, காவல்துறையினர் தரப்பில் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
இருப்பினும், விதிமுறையை மீறி சட்டவிரோதமாக சிலிண்டர்களைக் கொண்டு வந்து, அதன் மூலம் டீ போட்டதால் தீப்பொறிகள் வெளியேறியதால் இத் தீ விபத்து ஏற்பட்டது என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தாக ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி வனிதா தெரிவித்துள்ளார். ஆனாலும், தீ விபத்துக்கு காரணம் யார்? அதிகாலையில் சிலிண்டரை பயன்படுத்திய நபர்கள் யார் போன்ற பல்வேறு கோணத்திலும் ரயில்வே காவல்துறை எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் சம்பவத்தின்போது, பதற்றத்தில் சிலிண்டரை பயன்படுத்திய சமையலர் உட்பட 5 பேர் தப்பியது தெரிந்தது. இவர்களும் அந்தப் பெட்டியில் பயணிகளுடன் பயணித்துள்ளனர். அவர்களை போலீஸார் இன்று பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மேலும், போலீஸ் தரப்பில் கூறுகையில், ''ரயில்வே சுற்றுலாக் கழகம் சார்பில், முன்பதிவு செய்த பெட்டியில் காலியிடம் இருந்ததால் லக்னோவில் இருந்து சமையலர் உட்பட 5 பேர் கூடுதலாக பயணித்துள்ளனர். இவர்களில் ஒருவர் தான் சம்பவத்தன்று அதிகாலையில் சிலிண்டரைப் பயன்படுத்தி தீ பற்ற வைத்தாக விசாரணையில் தெரிகிறது. இதன்மூலம் எப்படி தீ பரவியது. ஏன் அணைக்க முயற்சிக்கவில்லை போன்ற கோணத்தில் அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம். லக்னோவில் விபத்துக்குள்ளான பெட்டியை முன்பதிவு செய்த டிராவல்ஸ் ஏஜென்சியின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஏஜென்சி உரிமையாளரை பிடிக்க, தனிப்படை ஒன்று லக்னோவுக்கு விரைவில் போக திட்டமிட்டுள்ளோம்,'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT