Published : 04 Dec 2017 12:57 PM
Last Updated : 04 Dec 2017 12:57 PM
சிலை செய்வதற்கான கற்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், அரசே கல்குவாரி திறக்க வேண்டும் என மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லவ மன்னர்களின் குடவரை சிற்பக்கலை நுணுக்கங்களை மாமல்லபுரம் உலகுக்கு பறைசாற்றி வருகிறது. மாமல்லபுரத்தில் சிற்பங்களை வடிவமைக்கும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிற்ப கலைஞர்கள், பரம்பரையாக சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருவதால், வாஸ்து மற்றும் சிற்ப சாஸ்திர அடிப்படையில் உண்மை தோற்றத்தை பிரதிபலிக்கும் கலை நுணுக்க வேலைபாடுகளுடன் சிற்பங்களை செதுக்குகின்றனர்.
இதனால், வெளிநாடு மற்றும் உள்ளூர் சிற்பக் கலைஞர்கள் மாமல்லபுரத்தில் சிற்பக் கலையை ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். தற்போது மாமல்லபுரத்தின் சிற்பக் கலைக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது. ஆனால், சிற்பங்கள் செய்வதற்கான கற்கள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதால், கற்கள் கிடைக்காமல் சிற்பம் செதுக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிற்பிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், முறையான அனுமதியின்றி விற்கப்படும் கற்களை அதிக விலை கொடுத்து வாங்கி சிலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அரசே கல் குவாரி திறக்க வேண்டும் என சிற்பக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில அரசு விருது பெற்ற சிற்பி பாஸ்கர் கூறும்போது, “கல்குவாரிகளை வெளி மாநிலத்தவர்கள் ஏலம் எடுத்துள்ளதால், கட்டுமான பணிகளுக்காக கற்களை வெடிவைத்து உடைத்து ஜல்லிகற்களாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், சிற்ப தொழிலுக்கான மூலப் பொருளாக விளங்கும் தரமான கற்கள் கிடைக்காமல் சிற்பக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில், சிற்பக் கலையை மேம்படுத்த அரசே குவாரிகளில் கற்களை விநியோகம் செய்கின்றன. எனவே, மாமல்லபுரம் சிற்பக் கலையின் நலன் கருதி அரசே கல்குவாரி மூலம் கற்களை விநியோகம் செய்ய வேண்டும். மேலும், தரமான கற்கள் கிடைக்கும் சங்கராபுரம் கல்குவாரி கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அந்த குவாரியை மட்டுமாவது சிற்பக் கலைக்கான குவாரியாக அறிவிக்க வேண்டும்” என்றார்.
கைவினை கலைத்துறை இயக்குநர் சந்தோஷ் பாபு கூறும்போது, “மாமல்லபுரம் சிற்பிகளுக்கு சிலை செய்வதற்கான கற்கள் கிடைப்பதில் உள்ள பிரச்சினையை தீர்க்க, கைவினைத் துறை சார்பில் சிறப்பான திட்டம் கொண்டு வரப்படும். மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து சர்வதேச சிறப்பு வாய்ந்த, மாமல்லபுரம் சிற்பக் கலையை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT