Published : 27 Aug 2023 04:06 AM
Last Updated : 27 Aug 2023 04:06 AM
சென்னை: திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு டிச.17-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி முறைப்படி தொடங்கப்பட்டது. அந்த அணியின் 2-ம் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றபோது, 7 அமைப்பாளர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 1983-ம் ஆண்டில் இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக மு.க.ஸ்டாலின் உயர்த்தப் பட்டார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியை மு.க.ஸ்டாலின் வகித்து வந்தார். அணியின் முதல் மாநாட்டை 2007-ம் ஆண்டு திருநெல்வேலியில் நடத்தினார். இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்றார். அப்போது இளைஞரணிச் செயலாளர் பதவி அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
பின்னர், அப்பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்படுவதாக கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, அணியின் 2-வது மாநில மாநாடு நடத்த திமுக தலைவர் அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போதுமாநாடு குறித்து அறிவிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கடந்த 2007-ம் ஆண்டு டிச.15-ம் தேதி கட்சி வரலாற்றில் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு முத்திரை பதித்து திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, வரும் டிச.17-ம் தேதி (ஞாயிறு) திமுக இளைஞரணியின் 2-து மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும்’’ என்று கூறப்பட் டுள்ளது.
திருப்புமுனை மாநாடு: திமுக தலைமையின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அமைச்சரும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி தனது ட்விட்டர் பதிவில், ‘‘பெருமை மிகு வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள இந்த மாநாட்டை, இந்திய அரசியலில் திருப்புமுனை மாநாடாகவும், தமிழக வரலாற்றில் தடம்பதிக்கக் கூடிய மாநாடாகவும் மாற்ற இன்றிலிருந்தே உழைக்க உறுதியேற்போம்’’ என குறிப்பிட் டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT