Published : 27 Aug 2023 04:08 AM
Last Updated : 27 Aug 2023 04:08 AM
சென்னை: தமிழகம் முழுவதும் 134 காவல் ஆய்வாளர்கள், டிஎஸ்பி பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழக காவல் துறையில் 750 காவல் உதவி ஆய்வாளர்கள் (எஸ்.ஐ.) 1997-ம் ஆண்டு நேரடியாகத் தேர்வாகி, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் ‘விங்’ என்று அழைக்கப்படும் காவல் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் 616 பேர் டிஎஸ்பியாகப் பதவி உயர்வு பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள 134 பேர் ஆய்வாளராகவே தற்போது பணிபுரிகின்றனர்.
நேரடி எஸ்ஐ.க்களாக பணியில் சேருவோர், 10 ஆண்டுகளில் ஆய்வாளர்களாக ( இன்ஸ்பெக்டர் ) உயர்வு பெற்று விடுவார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால், அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் 134 காவல் ஆய்வாளர்கள், 26 ஆண்டுகள் பணி முடிந்து, ஒருநிலை பதவி உயர்வு மட்டுமே பெற்று ஆய்வாளர் நிலையிலேயே உள்ளனர். அதுவும் 14 ஆண்டுகளாக ஆய்வாளர்களாகவே தொடர்கின்றனர்.
பதவி உயர்வு தாமதத்தால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கூறியதாவது: எங்களுடன் பணியில் சேர்ந்த 616 பேர் டிஎஸ்பியான நிலையில், எங்களுக்குப் பின்னால் பணியில் சேர்ந்த ( 1999, 2000, 2004, 2008-ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ) எஸ்.ஐ.க்கள் தற்போது ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
எங்களுக்கு 11 ஆண்டுகளுக்குப் பின் தேர்வானவர்களுடன் ஒரே நிலையில் பணி செய்வதால், சில அசவுகரியங்களை உணர்கிறோம். இந்தப் பிரச்சினை எங்கள் குடும்பத்தையும் பாதிக்கிறது. மேலும், பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் சில ஆய்வாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டனர். சிலர் ஓய்வு பெற்று விட்டனர். சிலர் இறந்தே போய் விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து டிஜிபி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘டிஎஸ்பி அந்தஸ்தில் 134 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டு, அதை தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டோம். அவர்கள்தான் (தமிழக உள்துறை) பதவி உயர்வுக்கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’’ என்றனர்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லதுமே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணி மற்றும் தேர்தல் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு பணிகள், தேர்தலுக்கு சிலமாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிடும். இதனால் பதவி உயர்வு அறிவிப்பு மேலும் தாமதமாகி விடுமோஎன்று பாதிக்கப்பட்ட ஆய்வாளர் கள் கவலையில் உள்ளனர். எனவே, அரசு இதில் கவனம் செலுத்தி, தகுதி உள்ள ஆய்வாளர்களுக்கு, உடனடியாக டிஎஸ்பி பதவி உயர்வு வழங்க வேண்டும்என்பதே அனைவரின் எதிர்பார்ப் பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT