Published : 27 Aug 2023 10:04 AM
Last Updated : 27 Aug 2023 10:04 AM

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

ரயில் பெட்டி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் அறிவித்த நிவாரண நிதியை வழங்கும் அமைச்சர் பி.மூர்த்தி.

சென்னை: மதுரை ரயில் நிலையத்துக்கு அருகே, நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தமிழக ஆளுநர், தெலங்கானா ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: மதுரை அருகே ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதை அறிந்து வேதனை அடைந்தேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது 9 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் எடுக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஆன்மீக சுற்றுலா ரயில்மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்ட செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ரயில் விபத்தில் 9 பேர் பலியான செய்தியறிந்து வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ரயிலில் காஸ் சிலிண்டர் போன்ற பொருட்களை எடுத்துச்செல்வதை ரயில்வே போலீஸ் தடுக்க வேண்டியது இன்றியமையாத கடமையாகும். விபத்தில் சிக்கி உயிரிழந்த பயணிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: சுற்றுலா ரயிலின் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், பயணிகளின் பொறுப்பற்றத் தன்மையும்தான் காரணம். சுற்றுலா பயணிகள், தங்களுடன் காஸ் சிலிண்டர் கொண்டு வந்துள்ளனர். இதை தடுத்திருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்காது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: சுற்றுலாப் பயணிகள் தனிப்பட்ட முறையில் பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் காஸ் சிலிண்டர் எப்படி அனுமதிக்கப்பட்டது? இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ரயிலில் பயணம் செய்யும்பயணிகள் ரயில்வே கோட்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: விபத்துக்கு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாததே முக்கிய காரணமாகும். இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாமல் இருக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

இதேபோன்று மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, அமமுக பொதுச் செயலாளர் தினகரன், தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x