Last Updated : 26 Jan, 2014 03:46 PM

 

Published : 26 Jan 2014 03:46 PM
Last Updated : 26 Jan 2014 03:46 PM

திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜயகாந்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன் என்று முதல்வரிடம் விருது வாங்கிய பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த அறிஞர்களுக்கு ஆண்டு தோறும் திருவள்ளுவர் தினத்தில் தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான விருதுகளுக்காக அறிவிக்கப்பட்டவர்கள், முதல்வர் கையால் விருதை வாங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், இந்த விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பேரறி ஞர் அண்ணா விருதை முதல்வர் வழங்கினார். தந்தை பெரியார் விருது - சுலோச்சனா சம்பத், அண்ணல் அம்பேத்கர் விருது - பேராயர் எம்.பிரகாஷ், பெருந்தலைவர் காமராசர் விருது - கி.அய்யாறு வாண்டையார், மகாகவி பாரதியார் விருது – பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பாவேந்தர் பாரதிதாசன் விருது - முனைவர் ராதா செல்லப்பன், தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது - ஜெ.அசோகமித்திரன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - பேராசிரியர் மு.ஜெயதேவன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்ற பிறகு, ‘தி இந்து’ வுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அறிஞர் அண்ணா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, ‘தம்பிக்கு’ என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதினார். ‘சமதர்ம சமுதாயத்தை அடைவதே நமது குறிக்கோள். செல்வம், சிலரிடத்தில் குவியும் வெள்ளம் போன்றது. அது செல்வத்தைக் கொண்டவர்களையும் சமுதாயத்தில் வலிவற்றவர்களையும் அழித்துவிடும்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் இன்றைக்கு மேல்மட்டத்தில் உள்ள மூன்று சதவீதம் பேரின் மொத்த வருமானம், நாட்டு மக்கள்தொகையில் பாதி குடும்பங்களின் வருமானத்துக்கு சமமாகும். அந்த அளவுக்கு ஏழை, பணக்காரர் வித்தியாசம் இருக்கிறது. இதுபோன்ற நிலையை மாற்றக்கூடிய அரசுதான் டெல்லியில் தேவை.

அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளதால் இந்த மாற்றம் சாத்தியமாகும். எனவே, அண்ணா வழி வந்தவர்கள், இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டியது கடமையாகும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்.

எண்ணெய் சட்டியில் இருந்து தப்பிக்க, எரியும் நெருப்பில் விழுந்து விடக்கூடாது. காங்கிரஸ் கட்சி வேண்டாம், மாற்றம் வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்துவிடக் கூடாது.

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவை எதிர்த்து பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்கிறீர்கள். அது, தேர்தலில் எத்தகைய அணி அமையப்போகிறது என்பதைப் பொருத்தே அமையும். பா.ஜ.க.வுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்தால் இந்தக் கேள்வியே எழாது. அதற்கான தேவையும் இருக்காது. ஆனால், திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தேமுதிகவுக்கு எதிராக நிச்சயம் பிரச்சாரம் செய்வேன்.

இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x