Published : 27 Aug 2023 04:00 AM
Last Updated : 27 Aug 2023 04:00 AM
நாகப்பட்டினம்: அரசின் திட்டங்களை எந்தவொரு தொய்வும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ், நாகை,திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், முதல்வர் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை சிறப்பான முறையில், எந்தவொரு தொய்வும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.
பட்டா மாறுதல், திருத்தம் போன்ற விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தால், முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும்.சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால், குறிப்பிட்ட காலத்துக்குள்ளாக சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை கடந்த மார்ச் 16-ம்தேதி முதல் அமல்படுத்தி வருகிறோம்.
ஆனால், மேற்கண்ட மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை கருணை உள்ளத்தோடு கவனிக்க வேண்டும். நகர்ப்புற சாலைப் பணிகளில் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னேற்றம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை, 10-ம் வகுப்பு தேர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது கவலைக்குரியது. இதை அடுத்த ஆண்டுக்குள் மாற்றியாக வேண்டும். இவை இரண்டிலும் மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கான கடனுதவி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், நிலுவையில் உள்ள சாலைப் பணிகளை முடிக்க வேண்டும். நாம் அனைவரும் மக்கள் சேவகர்கள் என்பதைமனதில் வைத்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, சிவ.வீ.மெய்ய நாதன், டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலாளர் நா.முருகானந்தம், மாவட்ட ஆட்சியர்கள் நாகை ஜானி டாம் வர்கீஸ், திருவாரூர் சாருஸ்ரீ,
தஞ்சாவூர் தீபக் ஜேக்கப், மயிலாடுதுறை ஏ.பி.மகா பாரதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக பணியாற்றி வரும் 8 அரசு பணியாளர்கள், சமூக தொண்டாற்றி வரும் 4 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT