Published : 02 Dec 2017 12:05 PM
Last Updated : 02 Dec 2017 12:05 PM
டாஸ்மாக் மதுக் கடைகளில் பார்களை ஆளும் கட்சியினருக்கு மட்டுமே ஒதுக்கும் வகையில் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு டோக்கன் ரூ.6 லட்சம் வரை பேரம் பேசப்படுகிறது.
தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் டாஸ் மாக் மூலம் நடத்தப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவால் 3 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால் மீண்டும் 2 ஆயிரம் கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.
மதுக் கடைகள் அருகிலேயே பார்கள் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் ஜுன் மாதம் பார்களுக்கான ஏலம் நடத்தப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவால் பல கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடந்த ஜுனில் பார் ஏலத்தில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. பல கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.
அங்கு பார்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஏலம் விட முடியாமலும், பார் கட்டணம் வசூலிக்க முடியாமலும் போனது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி பல பார்கள் அனுமதியின்றியே நடத்தப்பட்டது. இதற்காக அதிகாரிகள் உள்ளிட்ட சிலருக்கு மாமூல் வழங்கப்பட்டது. பார்கள் நடத்த இந்த மாதம் முதல் புதிதாக ஏலம் விடப்படுகிறது. ஆண்டு விற்பனைத் தொகையில் 2.5 சதவீதம் குறைந்தபட்ச ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் மதுவின் விலையும் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பார் ஏலம் எடுக்க சிலர் தயக்கம் காட்டுகின்றனர்.
இது குறித்து ஆளும் கட்சி பிரமுகர்கள் கூறியது:
அனைத்து பார்களையும் ஆளும் கட்சியினர் மட்டுமே ஏலம் எடுக்கும் வகையில் வழி ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. ஒவ்வொரு பாரும் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை அந்தந்த மாவட்ட, மாநகர் அதிமுக செயலாளர்கள் மூலம் முடிவு செய்யப்படுகிறது. நிர்வாகிகளின் பதவி, அவரது செயல்பாடு, கடைகளின் விற்பனை அளவு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக வைத்து யாருக்கு எந்த பார் என முடிவு செய்யப்படுகிறது. இதற்கு அடையாளமாக டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனை காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் அதிகாரிகள் பார் ஏலத்திற்கான டெண்டர் படிவமே அளிப்பார்கள். அவரே 3 படிவங்களை பெற்று, தனக்கு ஏலம் முடிவாகும்படி பார்த்துக்கொள்வார். இதற்கு அதிகாரிகள் உதவி செய்வர். டோக்கன் பெறுவதில் கட்சியினரிடம் கடும் போட்டி காணப்படுகிறது. இதை தவிர்க்க சில நிர்வாகிகளை இணைத்து ஒரு டோக்கன் வழங்கவும், இதில் கிடைக்கும் வருமானத்தை பகிர்ந்து கொள்ளவும் வழி செய்யப்படுகிறது.
பார் நடத்த விரும்பாத, பார் நடத்த கட்டிட உரிமையாளர்கள் அனுமதிக்காத நிலையில் டோக்கனை கட்சியினர் விற்கின்றனர். கடையின் விற்பனைத் தொகை யைப் பொறுத்து தொகை நிர்ணயிக்கப்படுகிறது. மதுரையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை டோக்கன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை கொடுத்து டோக்கனை பெற்றுச் செல்பவர்களுக்கு பார் ஏலத்திற்கான டெண்டர் படிவம் அளிக்கப்படும். அவரது பெயரிலேயே பார் நடத்தலாம். ஏலத் தொகையை மாதம்தோறும் நிர்வாகத்திற்கு அவர் செலுத்த வேண்டும். டெபாசிட் தனியே கட்ட வேண்டும். எழுதப்படாத சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த முறையால் பார் நடத்த விரும்புவோர் திணறுகின்றனர். ஏலத்தொகை அரை சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், கட்சியினருக்கு வழங்க வேண்டிய தொகையும் கணிசமாக உயர்ந்துவிட்டது. இதையும் மீறி லாபம் பார்க்க முடியுமா என்பதை கணக்கிட்டே பார் ஏலம் எடுக்க திட்டமிடுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 210 மதுக்கடைகள் இருந்தாலும், 70 கடைகளுக்குக் கூட டெண்டர் படிவம் பெறப்படவில்லை. டிசம்பர் முதல் தேதியில் இருந்தே பார் ஏலத்தொகை செலுத்த வேண்டும். திட்டமிட்டபடி ஏலத்தொகை செலுத்தாமலேயே பார் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு டோக்கன் பெற்ற ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்களது புகாரின் பேரில் கடந்த ஒருவாரத்தில் அனுமதியில்லாத பார்கள் செயல்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 2 கடைகளின் ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு தெரிந்தே அனுமதியில்லாத பார்கள் செயல்படும் நிலையில், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமா என கேள்வி எழுப்புகின்றனர் ஊழியர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT