Published : 26 Aug 2023 03:09 PM
Last Updated : 26 Aug 2023 03:09 PM
சென்னை: குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், திமுக அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிவரை சுமார் 5.25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு மற்றும் இந்திய வானிலை மையத்தின் ஆண்டு மழைப் பொழிவு பற்றிய விபரங்களையும் பெற்று டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தண்ணீர் திறப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் 110 அடிக்கு மேல் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விபரங்களைப் பெறாமல், இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஜூன் 12 அன்று மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டார்.
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ஆம் தேதி 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அன்றே மாலைக்குள் படிப்படியாக 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு, ஜூலை மாதத்தில் படிப்படியாக 16000 கனஅடியாக உயர்த்தி, ஆகஸ்ட் மாதத்தில் 18000 கனஅடியாக நீர் தேவைக்கேற்ப, மழையின் அளவுக்கேற்ப வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் 10 ஆயிரம் கன அடிதான். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள பாசனப் பரப்புகள் மற்றும் சில தண்ணீர் திறந்துவிடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசனப் பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தொகுதி, தலைஞாயிறு ஒன்றியத்தில் மட்டும் குறுவை சாகுபடி செய்து, போதிய தண்ணீர் இல்லாமல் பண்ணைத் தெரு, மாராச்சேரி, ஆய்மூர், வடுகூர், திருவிடமருதூர், நீர்மூலை, சித்தாய்மூர், கச்சநகரம், பனங்காடி, பாங்கல், கொளப்பாடு, கொத்தாங்குடி, நத்தப்பள்ளம், மணக்குடி, காடந்தேத்தி, வாட்டக்குடி, உம்பளச்சேரி, துளசாபுரம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் காய்ந்து கருகி காட்சியளிக்கின்றன. ஒரு ஒன்றியத்தில் மட்டும் இத்தனை கிராமங்கள் என்றால், மற்ற டெல்டா மாவட்டங்களின் பாதிப்பு என்ன என்பது அனைவருக்கும் நன்கு விளங்கும். டெல்டா விவசாயிகள் இந்த குறுவை சாகுபடியில் தங்களது சேமிப்பு மற்றும் உடலுழைப்பை இழந்ததுடன், கூட்டுறவு சங்க கடன்காரர்களாகவும் மாறி, முன்னெச்சரிக்கையுடன் செயல்படாத விடியா திமுக அரசின் மீது மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.
2004-ஆம் ஆண்டு முதல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, மத்தியில் ஆட்சி சுகத்தை அனுபவித்து வந்த திமுக, எதிர்வரும் 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்காக, இப்போதே பாட்னா மற்றும் பெங்களூரு சென்று காங்கிரஸ் கட்சியுடன் கைகுலுக்கும் திமுக, தனது கூட்டாளியான கர்நாடக காங்கிரசிடம், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிட வற்புறுத்தாமல் இருப்பதன் காரணத்தை பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளிடம் விளக்க வேண்டும்.
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. ஆடி மாதம் முடிவடைந்து ஆவணி மாதமே பிறந்துவிட்டது. மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்துக்கு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை சுமார் 16.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 320 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து சுமார் 263 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீர் மழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.
இன்று (26.8.2023), மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 54.91 அடி (120 அடி), நீர் இருப்பு 20.55 டி.எம்.சி. (மொத்த இருப்பு 93.47 டி.எம்.சி.). நீர் வரத்து சுமார் 12,000 கன அடி. தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடி. குறுவை சாகுபடிக்கே தண்ணீர் பற்றாத நிலையில், சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை விடியா திமுக அரசு வாயையே திறக்கவில்லை.
நான், அம்மாவின் அரசில் முதலமைச்சராக 2017-ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது கடும் வறட்சி. இந்தச் சூழ்நிலையில் நான், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, போதிய மழையில்லாத காரணத்தாலும், அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தாலும், 12.6.2017 அன்று சுமார் ரூ. 57 கோடிக்கு "குறுவை சாகுபடித் தொகுப்பும்”; தொடர்ந்து 28.09.2017 அன்று சுமார் ரூ. 42 கோடிக்கு ``சம்பா சாகுபடி தொகுப்பையும்’’ அறிவித்தேன்.
இதன் காரணமாக, 2017-ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் சுமார் 11 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடியும், தாளடி பருவத்தில் 2.15 லட்சம் ஏக்கரில் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள் பயனடைந்தனர். மேலும், அதிக மகசூல் தரும் ரகங்கள் உற்பத்தி மற்றும் விநியோகம், உழவுக் கருவிகள் விநியோகம், ஆசூ கலவை, ஜிப்சம் மற்றும் ஞஞ கெமிக்கல்ஸ் போன்ற முக்கியமான உள்ளீடுகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
அதிமுக அரசு பலமுறை இந்திய அரசிடமிருந்து "கிருஷி கர்மான்" விருதை பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கடும் வறட்சிக் காலமான 2017-2018ஆம் ஆண்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்காக கிருஷி கர்மான் விருது பெற்றோம். உண்மையான விவசாயிகளின் நண்பனாக, உரிய மழை இல்லாத வறட்சிக் காலத்திலும் விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் தோழனாக அம்மாவின் அரசு திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல.
மேலும், வறட்சிக் காலமான 2017-2018ஆம் ஆண்டில், சுமார் 15.18 லட்சம் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 31.71 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு காப்பீடு செய்யப்பட்டு, பிரீமியம் தொகைக்காக ரூ. 651 கோடி விடுவிக்கப்பட்டது. இதன் காரணமாக, வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிவாரணப் பணம் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த விடியா திமுக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. காப்பீடு செய்யக்கூட வக்கில்லாத நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக அரசு, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணம் பெற இயலாது. எனவே, இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
மேலும், இன்றுவரை சம்பா சாகுபடி குறித்தும், போதிய விதை நெல் மற்றும் உரங்கள் விநியோகம் குறித்தும் எந்தவிதமான அறிவிப்பையும் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு வெளியிடவில்லை. எனவே, எனது தலைமையிலான அம்மாவின் அரசு வறட்சிக் காலத்தில் செய்ததுபோல், சம்பா சாகுபடி மேற்கொள்ளும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சம்பா மற்றும் தாளடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும் என்று, ``நானும் டெல்டா மாவட்டத்துக்காரன்’’ என்று அடிக்கடி சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
டெல்டா விவசாயிகள் படும் வேதனையை கவனத்தில் கொள்ளாமல், உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம் என்று பசப்புவார்த்தை பேசி பிரச்சனையை திசை திருப்ப, முதலைக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தான்தோன்றித்தனமான செயல்பாட்டை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அல்லலுறும் வேளாண் பெருமக்கள் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து இந்த திமுக அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT