Published : 26 Aug 2023 02:37 PM
Last Updated : 26 Aug 2023 02:37 PM

திருப்பூர் மாநகராட்சி பள்ளி கழிவறையில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுமியின் செவித்திறன் பாதிப்பு: பெற்றோர் குற்றச்சாட்டு

திருப்பூர் : மாநகராட்சி பள்ளி கழிவறையில் மின்சாரம் பாய்ந்ததில், சிறுமியின் செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

திண்டுக்கல் அருகே குட்டத்துபட்டியை சேர்ந்த தம்பதி டேவிட்ராஜா, ஜெனிபர். கட்டிடத் தொழிலாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் செரங்காடு பகுதியில் தங்கி வாழ்ந்து வந்தனர். தம்பதியரின் மூத்த மகள் ஜோஸ்லின் ஜெனியா(13).

திருப்பூர் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஜோஸ்லின் ஜெனியா 8-ம் வகுப்பு படித்து வந்தார். அங்கு கடந்த 5-ம் தேதி கழிவறைக்கு சென்றபோது, அறுந்து தொங்கிய வயரில் இருந்து ஜோஸ்லின் ஜெனியாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதையடுத்து சிறுமியை மீட்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்றவர்கள் திருப்பூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

சிறுமியின் முழங்கை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு ஆகியஇடங்களில் முறிவு காணப்பட்டது. கழுத்திலும் காயம் ஏற்பட்டிருந்தது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் சரியாக காது கேட்காததால், ஜோஸ்லின் ஜெனியாவின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு சென்று காண்பித்தனர். இதில் அவரது காதுகள் பாதிக்கப்பட்டு விட்டதால், 90 சதவீத கேட்கும் திறன் இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தாய் ஜெனிபர் கூறும்போது, “மகள் ஜோஸ்லின் ஜெனியா மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த நிலையில், 20 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்து விட்டு, எனது மகளை குறை சொல்கிறார்கள். எனது மகளுக்கு முழங்கை, தோள்பட்டை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் கழுத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. காதுகள் 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்து விட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செலவு செய்யும் அளவுக்கு வசதி இல்லை. தமிழ்நாடு அரசு எனது மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர் பழைய நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

செரங்காடு நடுநிலைப்பள்ளி பள்ளித்தலைமை ஆசிரியை பிரேமா கூறும்போது, “பள்ளி கழிவறையில் மின்சாரம் பாய்ந்ததும், சிறுமிக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அங்கு கேட்கும் திறன் பாதித்ததாக சொல்லவில்லை,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x