செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆக.28 வரை நீட்டிப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 28-ம் தேதி வரை நீட்டித்துள்ள சிறப்பு நீதிமன்றம், அன்று அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பி்ன்னர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவருக்கு எதிராக 120 பக்க குற்றப்பத்திரிகை, 3 ஆயிரம் பக்க ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
பிறகு, நீதிமன்ற காவலை ஆக.25 வரை நீட்டித்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, இந்த வழக்கை எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி, இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிசிவக்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
காணொலி காட்சி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, அவரது நீதிமன்ற காவலை ஆக.28-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
