Published : 26 Aug 2023 04:41 AM
Last Updated : 26 Aug 2023 04:41 AM

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீடு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும், அதிமுகவில் இருந்துதங்களை நீக்கியதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு, ‘‘அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். பொதுச் செயலாளர் தேர்தலுக்கோ, ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதற்கோ தடை விதிக்க முடியாது’’ என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் நடைபெற்றது.

இருதரப்பு வாதம்: இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘இந்த வழக்குகளில் எங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் கூறவில்லை. ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை இபிஎஸ் தரப்பால் தடுக்க முடியாது. எனவே இபிஎஸ் பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

அதேபோல இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில், ‘ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரையும் கட்சியை விட்டு நீக்கி கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 8 மாதங்களாக மவுனம் காத்த மனுதாரர்கள், தற்போது அந்த தீர்மானங்களுக்கு தடைகோர எந்த உரிமையும் இல்லை. அதேபோல பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், அந்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே கட்சி செயல்பட்டு வருகிறது. அதை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. எனவே தாமதமாக தொடரப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், இடைக்கால தடை கோரிய இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த ஜூன் 28-ல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.

அவர்கள் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்திருந்த அனைத்து இடைக்கால மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

‘அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும். கட்சியில் மனுதாரர்களுக்கு உள்ள உரிமை குறித்து உரிமையியல் வழக்கில்தான் தீர்மானிக்க முடியும்’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளதால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்காலமாக தடை விதிக்க முடியாது. அவ்வாறு தடை விதித்தால், அது பிரதான கோரிக்கை மனு மீதான உரிமையியல் வழக்கின் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

எனவே, இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கோரிய அனைத்து இடைக்கால கோரிக்கைகளையும் ஏற்க முடியாது என்பதால் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இவ்வாறு கூறி, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் இருந்து எங்களை நீக்கியது செல்லாது. அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது’ என்று அறிவிக்ககோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பிரதான உரிமையியல் வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்: அதிமுக பொதுக்குழு, தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை வரவேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகளுக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், நடனமாடியும், பழனிசாமிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x