Published : 08 Dec 2017 08:16 PM
Last Updated : 08 Dec 2017 08:16 PM
தமிழக அரசியலில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் எழும். பின்னர் அவை மக்களால் மறக்கப்படும். பல ஊழல்கள் விசாரணை கமிஷன் மூலம் காணாமல் போன வரலாறும் தமிழகத்தில் உண்டு. அப்படி அதை ஒன்றுமில்லாமல் செய்தவர்களே பின்னர் ஊழலுக்கு எதிராக போராடிய வரலாற்றையும் மக்கள் பார்த்து வருகின்றனர்.
ஆனால் சமீப வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வெளிவரும் தகவல்கள் இதுவரை இல்லாத பல திடுக்கிடும் நிகழ்வுகளை மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. பல புதிய நிகழ்வுகளையும் தமிழகம் பார்க்கிறது.
அதற்கு முன்னர் சிறிய நினைவூட்டலுக்காக இந்த தகவல், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி சிவகாசியில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''சேகர் ரெட்டிக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருடனான தொடர்பு குறித்து யார் வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன், குடிநீர் தட்டுப்பாடு, டெங்கு காய்ச்சல் போன்ற பிரச்னைகளை தீர்க்க அரசு வேகம் காட்ட வேண்டும் என்ற காரணத்தினால்தான் போராட்டம் அறிவித்தோம்.
இதைப் பொறுக்க முடியாத சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், சேகர் ரெட்டிக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக பேசி வருகிறார்.
திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு வரும்போது சேகர் ரெட்டி என்னுடன் போட்டோ எடுத்து கொண்டார். மற்றபடி அவருக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சேகர் ரெட்டியுடனான தொடர்பு குறித்து யார் வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்'' என்று பேசினார்.
அவர் பேட்டி அளித்த சில மாதங்களிலேயே சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் என்று சிலவற்றை ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் 'பெரியவர்' ஓபிஎஸ் என்ற பெயரிலும், ரமேஷ் ஓபிஎஸ் பிஏ என்ற பெயரிலும் பணம் கொடுக்கப்பட்டதாக விபரம் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆங்கில ஊடகங்களால் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் என இன்று வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களால் தமிழக அரசியல் களமே பரபரப்புக்குள்ளாகி உள்ளது.
இதில் ஓபிஎஸ் தவிர மேலும் எட்டுக்கும் மேற்பட்ட அமைச்சர்களின் பெயர்களும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மணல் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்து போயஸ் கார்டன் வரை செல்வாக்கு பெற்றிருந்தார் சேகர் ரெட்டி என்று கூறப்படுகிறது. யார் இந்த சேகர் ரெட்டி என்று பலரும் தற்போது அறிந்திருந்தாலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சில நாட்களிலேயே வருமான வரித்துறை ரெய்டின் மூலம்தான் சேகர் ரெட்டி வெளிச்சத்துக்கு வந்தார்.
அதுவரை எங்காவது ஒரு மூலையில் சேகர் ரெட்டி என்ற பெயர் வரும். சாதாரணமாக மணல் கான்டிராக்டர் என்கிற ரீதியில் தான் மக்கள் பார்த்தார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்.7-ம் தேதி வருமான வரித்துறை சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது. சரியாக சொல்லப்போனால் ஒரு ஆண்டு முடியும் தருவாயில் இன்று மீண்டும் சேகர் ரெட்டி விவகாரமும் அமைச்சர்களை அடையாளம் காட்டும் பெயர்களுடன் டைரியின் பக்கங்களும் வெளிவந்துள்ளன.
ஜெயலலிதா ஆட்சியில் செல்வாக்காக வலம் வந்த சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் என்றால் ஓபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் என்றும் கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணமடைந்து இரண்டு நாட்கள் கழித்து டிச.7-ம் தேதி வருமான வரித்துறையினர் சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். சேகர் ரெட்டியின் தி.நகர் வீடு, அவரது உறவினரின் தி.நகர் வீடு, சேகர் ரெட்டியின் திருமங்கலம் அலுவலகம், சேகர்ரெட்டியின் சொந்த ஊரான வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள வீடு என 8 இடங்களில் வருமானவரித்துறையினர் 160 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.96.89 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், 9.63 கோடி ரூபாய் புதிய 2000 நோட்டுகள், 127 கிலோ தங்கம், 24 கோடி 2000 நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் மற்றும் தங்கம் தவிர, சேகர் ரெட்டி அலுவலகத்திலிருந்து, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கிய கணக்கு எழுதப்பட்ட டைரியும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த டைரியில் என்ன உள்ளது என்பது குறித்து பல சந்தேகங்கள் இருந்த நிலையில் இன்று ஆங்கில ஊடகங்கள் மூலம் அந்த டைரிகளில், 2016-ம் ஆண்டுக்கான கணக்கு எழுதப்பட்ட டைரிகளின் பக்கங்கள் வெளியாகி உள்ளன. டைரி வெளியான சில மணி நேரங்களில் தமிழக அரசியல் பரபரப்பானது. காரணம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள்தான்.
அதில் பெரியவர் என்ற பெயரில் சில இடங்களிலும் பெரியவர் ஓபிஎஸ் என சில இடங்களில் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ட்ரான்ஸ்போர்ட் மினிஸ்டர் என எம்.ஆர் விஜயபாஸ்கரையும், ஹெல்த் மினிஸ்டர் என சி.விஜயபாஸ்கரையும், மின்சாரத்துறைஅமைச்சர் என தங்கமணியையும், சுற்றுச்சூழல் அமைச்சர் என கே.சி.கருப்பணனையும், திண்டுக்கல் லோக்கல் மினிஸ்டர் என திண்டுக்கல் சீனிவாசனையும், ஐ.ரமேஷ் மினிஸ்டர் பி.ஏ என்றும் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மினிஸ்டர் என குறிக்கும் வகையில்தான் எம் என ரவுண்ட் போட்டு உள்ளனர்.
முதல் பக்கத்தின் தலைப்பிலேயே ஹெல்த் என்று போடப்பட்டு 2 மற்றும் 3 என்று மொத்தம் 5 கோடி காண்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மன்னார்குடி மகாதேவன், கலைராஜன் எம்.எல்.ஏ, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, வன்னியரசு, ஓபிஎஸ் அட்வகேட் காசிராஜன். பூங்குன்றன், கடலூர் கலெக்டர் என பல பெயர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெளிவந்துள்ள இந்த டைரியின் பக்கங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் சேகர் ரெட்டிக்கும் தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் உள்ள நெருக்கம் ஊரறிந்த ஒன்று. 1990களில் சாதாரணமாக ரயில்வே கான்ட்ராக்ட் வேலைக்கு, கமிஷன் அடிப்படையில் ஆட்களை பிடித்துக் கொடுப்பது என்று தனது பணியை துவக்கிய சேகர் ரெட்டி 1994-ல் அதிமுகவுடன் நெருக்கமாகியுள்ளார்.
அதிமுகவில் உறுப்பினராகவும் ஆகியுள்ளார். அதிமுக தோல்விக்கு பிறகு ஒதுங்கி இருந்தவர் 2001-ல் அதிமுக ஆட்சியைப் பிடித்தவுடன் தனது வளர்ச்சிப் படிகளில் ஏறியவர் பின்னர் திரும்பிப் பார்க்கமுடியாத எட்டாத உயரத்திற்குச் சென்றுவிட்டார். போயஸ் கார்டனில் சேகர் ரெட்டி நெருக்கமானதும் அவரது வளர்ச்சி அபாரமானது என்று சொல்லப்படுகிறது. கார்டனின் நெருக்கம் காரணமாக அரசு ஒப்பந்தப் பணிகள், மணல் குவாரிகளில் சேகர் ரெட்டியின் ஆதிக்கம் பெருகியது. சேகர் ரெட்டிக்கு நெருங்கியவர்கள் என்று கூறப்பட்ட சில அமைச்சர்களில் ஓபிஎஸ், மற்றும் விஜயபாஸ்கருக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் எடப்பாடி அணியில் இல்லாத நேரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்றோர்களே சேகர் ரெட்டிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி வெளிப்படையாக கூறியதும் அதற்கு ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்ததும் நடந்தது. இது குறித்து அமைச்சர்கள் ஓபிஎஸ், சி.விஜயபாஸ்கர், போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு அவர்கள் பதிலை பதிவு செய்ய 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் தொடர்பு கொண்டபோது அவர்கள் இணைப்பில் வரவில்லை.
அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் கேட்டபோது, சிறிது நேரம் கழித்து அழைப்பதாக தெரிவித்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'தனக்கு அப்படி ஒரு விஷயம் நடப்பதே இப்போதுதான் தெரியும், சேகர் ரெட்டியை தனக்குத் தெரியாது' என்று தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கி உள்ள நிலையில் இந்தப் பிரச்சினை பெரிய அளவில் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்பதும், லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் நாளை காலை ஆளுநரை சந்தித்து சேகர் ரெட்டி டைரி விவகாரம் குறித்து முறையிட உள்ளனர். இதனால் இந்த விவகாரம் அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் பெரிதாக எதிரொலிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT