Published : 04 Dec 2017 08:21 AM
Last Updated : 04 Dec 2017 08:21 AM
ஒக்கி புயலுக்கு பின்னர் இன்று வரை குமரி மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னும் கரை வந்து சேராததால், அவர்களை விரைந்து மீட்கக் கேட்டு ஆங்காங்கே மறியல் நடைபெறுகிறது.
சுனாமிக்கு பின்னர் மீனவர்கள் சந்தித்துள்ள பெரிய பேரிடர் இது. புயலால் விழுந்த மரங்கள், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம், மின் தடை ஆகியவை பிரதான பிரச்சினைகளாக இருந்தன. இப்போது, மாயமான மீனவர்களின் எண்ணிக்கையும், அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரும் இப்போது பிரதானமாக இடம்பிடித்துள்ளது.
கரை திரும்பாத மீனவர்கள்
கடந்த 1992-ல் இருந்து, 2016-ம் ஆண்டு வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்று, இன்று வரை கரை திரும்பாமல் மாயமானவர்களின் எண்ணிக்கை மட்டும் 188. கடலில் மாயமாகி கரைக்கு திரும்பாதவர்கள், 7 ஆண்டுகளுக்கு பின்பே இறந்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதன் பின்னரே நிவாரணமும் வழங்கப்படும். அதேபோல் இப்போது மாயமாகியுள்ளதாக வரும் செய்திகளுக்கு 7 ஆண்டுகளுக்குப் பின்னரே முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
எச்சரிக்கை கொடுக்கப்பட்டதா?
பொதுவாகவே கடலுக்குள் புயல் மையம் கொள்ளும்போதும், கடும் சூறைக்காற்றின் போதும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் பெர்லின் கூறும்போது, ``45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றுதான் கூறினார்கள். ஆனால், அரசு சொன்னதைவிட அசுர வேகத்தில் புயல் அடித்ததால்தான் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கைக்கான கூண்டு ஏற்றப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களிடம் வயர்லெஸ் உள்ளது. கடலோரக் காவல் படையின் கப்பல்களை, மீனவர்களின் வயர்லெஸுடன் இணைத்து அலைவரிசை கொடுக்க வேண்டும் என வெகுநாட்களாக கோரி வருகிறோம். ஆனால், பாதுகாப்பை காரணம் காட்டி மறுத்து வருகின்றனர். இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் ஆழ்கடல் மீன் பிடிப்போருக்கு தகவல் சொல்லும் சூழல் இல்லை”என்றார்.
தொடரும் உயிரிழப்பு
தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாதர் சர்ச்சில் கூறியதாவது: மாயமானதாக கூறுவதே ஒரு வகையான கண் துடைப்புதான். குளச்சலில் இருந்து ஒரு விசைப்படகில் 15 பேர் மீன் பிடிக்க சென்றுள்ளனர். ‘ஒக்கி’ புயலில் படகு கவிழ்ந்தது. இதில், 3 மீனவர்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். மற்ற 12 மீனவர்களும் தண்ணீருக்குள் மூழ்கியதை சக மீனவர்கள் பார்த்து வந்து சொல்கின்றனர். ஆனாலும், அரசு மாயம் என்றுதான் சொல்கிறது. இன்னொரு விசைப்படகில் இருந்த ஒருவரும் மூழ்கியுள்ளார். கண்ணுக்கு தெரிந்தே குளச்சலில் மட்டும் 13 மீனவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக, உடன் வந்த மீனவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அரசு மாயம் என்றே எங்களை திசைதிருப்புகிறது.
லட்சத்தீவில் 126 மீனவர்கள் இருப்பதாக தகவல் வருகிறது. குமரி மாவட்ட மீனவர்களின் விசைப்படகுகளில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் மீன் பிடிக்கச் செல்கின்றனர். அவர்களில் மூன்று பேரும் நீரில் முழ்கியுள்ளனர். குமரியில் மட்டும் 67 பேர் இன்னும் கரை திரும்பவில்லை. ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, இன்னும் வீடுகளுக்கு திரும்பாதவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் தாண்டும். ஆனால், மீட்பு நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை. கேரளத்தில் அமைச்சர்களே களத்தில் இறங்கியுள்ளனர்”என்றார்.
60 ஆயிரம் கோடி வருமானம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் 48 கடலோர கிராமங்கள் உள்ளன. கட்டு மரம், நாட்டுப் படகு, விசைப் படகு, கரைமடி என 80 ஆயிரத்துக்கும் அதிகமான மீன் பிடித் தொழிலாளர்கள் உள்ளனர். இதுபோக மீன் பிடித் தொழிலை சார்ந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் தேர்ந்தவர்கள். ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் அரசு, அதே நேரத்தில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் ஒலிக்கிறது. ஆழ்கடல் மீன் பிடிப்பின் மூலம் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி அந்நிய செலவாணி கிடைக்கிறது.
தமிழக அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் கூறியதாவது:
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, குஜராத், கோவா, மஹாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவுகளில் மீட்கப்பட்டுள்ள மீனவர்களை அழைத்துவர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த 30-ம் தேதி முதல் இதுவரை 197 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்ப வந்துள்ளனர். 97 மீனவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். லட்சத்தீவில் 172 மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களிலிருந்து எத்தனை மீனவர்கள் கடலில் சென்றுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க கிராமங்கள் வாரியாக விவரங்கள் சேகரிக்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு அறை
மீனவர்களுக்காக கிராத்தூரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கரை ஒதுங்கிய மீனவர்கள் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண முடியவில்லை. மீனவர்களுக்கு தொடர்பு கருவிகள் மூலம் புயல் குறித்த தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நாட்டிக்கல் மைல் தாண்டி போனவர்களுக்கு தகவல் கிடைக்காதுஎனவும் தெரிவித்தனர்.
எச்சரிக்கை கூண்டு உணர்த்தும் பாடம்!
ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம். இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை.
5வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என அர்த்தம். 6வது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள். 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.
8-ம் எண் புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 9-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் , துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
11ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுவது தான் அதிகபட்ச எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை விடப்பட்டால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என அர்த்தம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT