Published : 30 Jul 2014 09:00 AM
Last Updated : 30 Jul 2014 09:00 AM

எம்.பி.பி.எஸ். படிக்கும் ஆதிதிராவிட மாணவிக்கு தேவையான கல்விக் கடன் வழங்க வேண்டும்: பாரத ஸ்டேட் வங்கிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ். மாணவிக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவி சி.மீனாட்சி, கடந்த 2009-ல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 560 வீதம் 4 ஆண்டுகளுக்கும், இறுதியாண்டில் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 60-ம் அவர் கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டும். முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை சிலரிடம் கடனாக வாங்கி மீனாட்சியின் பெற்றோர் செலுத்திவிட்டனர்.

அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை அவர்களால் செலுத்த முடியவில்லை. ஆகவே, 2010-ம் ஆண்டில் கல்விக் கடன் கேட்டு பாரத ஸ்டேட் வங்கியில் மீனாட்சி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே, முதலாம் ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மீனாட்சி, இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிப்பையும் முடித்தார். தேர்வில் அவர் வெற்றி பெற்ற போதிலும், கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் அவரது மதிப்பெண் சான்றிதழ்களை வழங்காமல் கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்தது. மீதமுள்ள கல்விக் கட்டணம் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மீனாட்சி அளித்த உறுதிமொழிக் கடிதத்தின் அடிப்படையில் நான்காம் ஆண்டு தேர்வு எழுத அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, கல்விக் கடனாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டி பாரத ஸ்டேட் வங்கியில் மீனாட்சி மீண்டும் விண்ணப்பித்தார். எனினும் ரூ.4 லட்சம் மட்டும் வங்கி நிர்வாகம் கடன் வழங்கியது. அதனால், கல்விக் கடன் கேட்டு மீண்டும் அவர் விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பம் கடந்த மே 27-ம் தேதி நிராகரிக்கப்பட்டது. ‘ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உட்பட்ட எஸ்.சி., எஸ்.டி. குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்விக் கட்டணத்தை அரசே வழங்கும் என 2012-ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்விக் கட்டணத்தை அரசு வழங்குவதால் வங்கியில் கடன் வழங்க முடியாது’ என கடன் நிராகரிப்பு கடிதத்தில் வங்கி நிர்வாகம் கூறியிருந்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மீனாட்சி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எம்.சத்தியநாராயணன் கடந்த 21-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

மனுதாரர் மீனாட்சி 2009-ம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். தமிழக அரசின் அரசாணை 2012-ம் ஆண்டில்தான் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, அந்த அரசாணையை காரணம் காட்டி கடன் வழங்க மறுக்க முடியாது. ஆகவே, மனுதாரர் மீண்டும் புதிதாக கடன் கோரும் விண்ணப்பம் அளிக்கலாம்.

மனுதாரர் ஆதிதிராவிட சமூகத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். பயில வந்துள்ளார். அவர் தனது படிப்பை முடித்தாக வேண்டும். ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு அவர் சேவையாற்ற வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, கடன் விண்ணப்பம் கிடைத்த 2 வாரங்களுக்குள் அதை பரிசீலித்து வங்கி நிர்வாகம் உரிய முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x