Published : 26 Aug 2023 12:00 AM
Last Updated : 26 Aug 2023 12:00 AM
மதுரை: விவாகரத்து உள்ளிட்ட குடும்ப நல வழக்குகளை சமரசமாகவோ அல்லது உரிய நிவாரணம் வழங்கியோ ஓராண்டுக்குள் முடிக்க, உரிய விதிமுறைகளை வகுக்க தலைமை நீதிபதியிடம் வலியுறுத்துவேன் என முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறினார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்எம்பிஏ (MMBA) வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி அரங்கில் பாராட்டு விழா நேற்று நடந்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி எஸ்எஸ். சுந்தர் தலைமை வகித்தார். நீதிபதிகள் விஜயகுமார், ஸ்ரீமதி, கேகே. ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். நீதிபதி எஸ்எஸ்.சுந்தர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணவேணி, மீனாட்சி சுந்தரம், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் குறித்து பாராட்டி பேசினர்.
இதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது: நான் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய போது நான் மற்றும் நீதிபதி சவுகான் ஆகியோர் அமர்வு பாம்பே குண்டுவெடிப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து, நாள் தோறும் பத்து மாதங்கள் இடைவெளி இன்றி விசாரித்தோம். அதன்பின், நான்கு மாதங்களில் தீர்ப்பு வழங்கினோம். இது, வாழ்நாளில் மறக்க முடியாது. அதுபோன்று தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனப்படும் நோட்டோ வருவதற்கும் என்னுடைய தீர்ப்பு உறுதுணையாக இருந்தது.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஒரு வழக்கில் மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தி பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி மாற்றுவதற்கு எனது அமர்வு தீர்ப்பும் ஒரு துண்டுகோலாக இருந்தது. இதுபோன்று பல வழக்குகளை குறிப்பிடலாம். இன்றைய நிலையில் வழக்கறிஞர்கள் வழக்குகள் குறித்த சட்ட நிபுணத்துவத்தோடு அதற்கு உறுதுணையாக உள்ள நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும். நவீன தொழில் நுட்பம் குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும். குறிப்பாக இன்றைக்கு கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உரிமையியல் வழக்குகளில் தேவையின்றி வாய்தா வாங்குவது தவிர்க்க வேண்டும். எவ்வளவு விரைவாக வழக்கை நடத்தி முடிக்க முடியுமோ முடிக்கவேண்டும். தாமதத்திற்கான இடர்பாடுகளை கண்டறிந்து களையவேண்டும். இன்றைக்கு உள்ள முக்கிய கோரிக்கை என்னவென்றால் விவாகரத்து, குடும்ப பிரச்சினை உள்ளிட்ட குடும்ப நல வழக்குகள் மூன்று முதல் நான்கு ஆண்டு வரை நிலுவையில் உள்ளது. இது ஏற்புடையது அல்ல ஓராண்டிற்குள் குடும்ப விவாகரத்து உள்ளிட்ட குடும்ப நல வழக்குகளை சமரசமாகவோ அல்லது உரிய நிவாரணம் வழங்கியோ முடிக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். இதுகுறித்து நான் தலைமை நீதிபதியை சந்திக்கும்போது வலியுறுத்த உள்ளேன். இங்குள்ள நீதிபதிகளும் வழக்கறிஞர்கள் இது குறித்து வலியுறுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தற்பொழுது நான் ஒரு இயற்கை விவசாயியாக. இருப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்" இவ்வாறு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT