Published : 25 Aug 2023 06:49 PM
Last Updated : 25 Aug 2023 06:49 PM
சென்னை: “மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நம்பிக்கை தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் அருகே சூரக்குளம் கிராமத்தில் முதல்வரின் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடக்க விழா நடந்தது. ஊராட்சி ஒன்றியத் தலைவர் வேட்டையன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ,மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''வரலாற்று சிறப்புமிக்க ஒரு திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். எனது தொகுதிக்கு உட்பட்ட சூரக்குளத்தில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. இது இந்தியாவின் முன்னோடி திட்டமாக உள்ளது. இது வெற்றி அடைய வேண்டும். இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவவேண்டும்.
நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கிய பிறகு பாதித்தோர் மேல்முறையீடு செய்வது வழக்கம். ஆனால் தாமாக வந்து திமுக அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டை விசாரிக்கும் அந்த நீதியரசர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீதும் தாமாக முன்வந்து விசாரணை செய்வதிலும் வேகம் காட்ட வேண்டும். நீதி என்பது ஒரு சாரருக்கு மட்டும் இருக்கக் கூடாது. அதிமுகவினர் ஆளுங்கட்சியினரை ஏதாவது ஒரு வகையில் பழி சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மதுரை வளையங்குளத்தில் நடந்த அதிமுக மாநாடுக்கு வந்தவர்களுக்கு உணவு கூட, அளிக்க முடியாத நிலையில் தான் உள்ளனர். மாநாட்டில் அக்கட்சி பொதுச் செயலர் கே.பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றவர்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல் சென்றார்.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ராகுல் காந்தி பிரதமர் ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறியதை வரவேற்கிறேன். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். அப்போது, தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அந்தந்த மாநிலங்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசின் திட்டங்கள் இருக்கும். தமிழக அரசு நிராகரிக்கும் எந்த திட்டங்களையும் ராகுல் காந்தி தலைமையிலான அரசு திணிக்காது. இதை முன்னெடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்'' என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் சத்யன், வித்யாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT