Published : 25 Aug 2023 12:50 PM
Last Updated : 25 Aug 2023 12:50 PM
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்த எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரது காவலை ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஆக.25) முடிவடைந்தது. இதையடுத்து, புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், அன்றைய செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT