Published : 25 Aug 2023 06:20 AM
Last Updated : 25 Aug 2023 06:20 AM

மூன்று அமைச்சர்கள் மீதான வழக்கு | உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தகவல்

சென்னை: மூன்று அமைச்சர்கள் மீதான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கும் அறிவிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றங்கள் விடுவித்த நிலையில், அமைச்சர்கள் க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்குகளை தாமே முன்வந்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை: திமுகவைப் பொறுத்தவரை நீதிமன்றத் தின் மீது அளவு கடந்த நம்பிக்கை, மரியாதை உண்டு. நீதிமன்றம் வாயிலாக பல வெற்றிகளை பெற்றுள்ள இயக்கம் திமுக. குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நடை பெற்ற ஊழல்கள் நீதிமன்றம் வாயிலாக நிரூபிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த நேரத்தில், அவருக்கு அண்ணா சதுக்கம் அருகில் இடம் தரஇயலாது என்று அப்போதைய முதல்வர் பழனிசாமி மறுத்தபோது இரவோடு இரவாக நீதிமன்றம் கூடி வழக்கை விசாரித்து கருணாநிதிக்கு அவர் விரும்பியபடி, அண்ணா காலடியில் அடக்கம் செய்யும் உரிமையை நீதிமன்றம் வாயிலாக பெற்றோம்.

நீதிமன்றத்தின் மீது திமுக நம்பிக்கை வைத்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக ஏற்கெனவே முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்குகளை திமுக சந்திக்கத் தயாராக உள்ளது.

அதிமுக ஆட்சியில் மிரட்டல்கள்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எப்படி பழிவாங்கப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒருவர் வீட்டு குடிநீர், மின்சாரம், கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகளை அப்போது திமுக கண்டித்தது.

இந்நிலையில், ஏற்கெனவே முடிந்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x