Published : 25 Aug 2023 08:15 AM
Last Updated : 25 Aug 2023 08:15 AM

கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடியில் திமுக எம்எல்ஏ காருக்கு அனுமதி மறுப்பு - ஊழியர்கள் 4 பேரிடம் போலீஸார் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு நேற்று வந்த சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவின் உறுப்பினரான திமுக எம்எல்ஏ மோகனின் காருக்கு கட்டணம் செலுத்தினால் தான் அனுமதிப்போம் என சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக குழு உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த அண்ணாநகர் எம்எல்ஏ மோகன், நேற்றுக் காலை தனது ஆதரவாளர்களுடன் கள்ளக்குறிச்சி நோக்கி காரில் சென்றபோது, மாடூர் சுங்கச்சாவடியில் அவரது கார் மறிக்கப்பட்டது.

அப்போது, தான் திமுக எம்எல்ஏ மோகன் என்று அவர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கூறி உள்ளார். அதை ஏற்காத சுங்கச்சாவடி ஊழியர்கள், ‘யாராக இருந்தாலும், கட்டணம் செலுத்திய பின்னரே அனுமதிக்கப்படுவர்’ என்று கூறியுள்ளனர்.

உரசி சென்ற கார்: அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மோகன் எம்எல்ஏ, தனது ஓட்டுநரைப் பார்த்து, வாகனத்தை எடுக்கும்படி கூறியுள்ளார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுப்புக் கட்டையை குறுக்கே போட்டு வாகனத்தை நிறுத்தி, மறிக்க முயற்சித்தனர். அதை உரசிக் கொண்டு எம்எல்ஏ வாகனம் சென்றது.

இதைத் தொடர்ந்து இதுபற்றி மோகன் எம்எல்ஏ சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர் எம்எல்ஏ வேல்முருகனிடம் முறையிட்டார். உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகன் உடனே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன், சுங்கச்சாவடிக்குச் சென்று, இதுபற்றி சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் முறையிட்டார்.

குற்ற வழக்கு: கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஆய்வு பணியில் உள்ளதால் இன்று (நேற்று) முழுவதும் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் செல்லும் வாகனங்களை மறிக்ககூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் பரிந்துரைத்தார்.

பரிந்துரையை தொடர்ந்து, ஆட்சியரும், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்களை மறிக்க வேண்டாம் என உத்தரவிட்டார். தொடர்ந்து காரை வழிமறித்த ஊழியர்களின் மேல் குற்ற வழக்கு பதிவு செய்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் 4 பேரிடம் கள்ளக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு ஆய்வுக்காக வந்த அதிகாரிகள் வாகனங்களையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ வேல்முருகன், “மாடூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் நள்ளிரவில் அரசு அதிகாரிகள் காரை மறித்துள்ளனர். அதையடுத்து எம்எல்ஏ காரை மறித்து பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் அராஜகப் போக்கில் ஈடுபட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் பரிந்துரை செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x