Published : 25 Aug 2023 08:55 AM
Last Updated : 25 Aug 2023 08:55 AM

தமிழ் மொழியை காக்கும் போராட்டங்களில் ஆன்மிகவாதிகள் பங்களிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் பவள விழா நிறைவையொட்டி நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்  ல கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பெற்றுக் கொள்கிறார். உடன், அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. செ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி ஆகியோர்.

மயிலாடுதுறை: தமிழ் காக்கும் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் கடந்த காலத்தைப்போல, இன்றைய ஆன்மிகவாதிகளும் பங்களிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75-வது ஆண்டு பவள விழா நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: 16-ம் நூற்றாண்டில் குருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்ட இந்த மடம், அன்று முதல் இன்று வரை ஆன்மிகம், தமிழ், கல்வி, அறப்பணிகள், மருத்துவ சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர வேண்டும்.

தருமை ஆதீனத்துடன் எங்களுக்கு குடும்ப நட்பும் உண்டு. அறநிலையத் துறைக்கு நாங்கள் ஆற்றும் பணிகளை மடாதிபதிகள், நீதிபதிகள் பாராட்டுகின்றனர்.

அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்று ஏங்கும் ஒரு கூட்டம்தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிற சந்நிதானங்கள், தமிழக மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது.

நாட்டுக்கும், மக்களுக்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து வரும்போதெல்லாம், ஆன்மிகப் பெரியோர்கள் அதற்கு எதிராக குரல் கொடுத்து போராடியுள்ளனர். இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ் காக்கும் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் ஆன்மிக வாதிகள் தங்கள் பங்களிப்பை கடந்த 100 ஆண்டுகளாக செலுத்தியது போல, இன்றைய ஆன்மிகவாதிகளும் பங்களிக்க வேண்டும்.

தமிழ் மொழி, தமிழகம், தமிழர்கள் இந்த மூன்றும் காப்பாற்றப்பட்டால்தான், இது போன்ற மடங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நூற்றாண்டு விழாவிலும்...: விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசியது: இக்கல்லூரியின் வெள்ளிவிழால் அப்போதைய முதல்வர் கருணாநிதியும், பொன்விழாவில் அப்போதைய அமைச்சர் க.அன்பழகனும் கலந்துகொண்டார். தற்போது பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டது மகிழ்ச்சி. அடுத்து நூற்றாண்டு விழாவுக்கும் இவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஆன்மிக ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது என்றார்.

முன்னதாக ஆதீனத்தின் சார்பில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

விழவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. செ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x