Published : 21 Dec 2017 12:39 PM
Last Updated : 21 Dec 2017 12:39 PM

பெத்தாம்பூச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கழிவறைகளை மாணவர்கள் சுத்தம் செய்கிறார்களா? - பெற்றோர் புகார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெத்தாம்பூச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியரை கழிவறை கழுவச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

பல்லடம் ஒன்றியத்தில் மிகவும் பின் தங்கிய பகுதி பெத்தாம்பூச்சிபாளையம். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பலர் விசைத்தறி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். பலர் கட்டிட வேலைக்காக வெளியூர் சென்று வருகின்றனர்.

21Cbkr_School 1 சுத்தம் செய்யும் மாணவர்கள்.

அன்றாடம் காலை 8.30 மணிக்கு பள்ளிக்குச் செல்லும் ஆண், பெண் குழந்தைகளைக் கொண்டு இரு கழிவறைகளையும் தொடர்ந்து சுத்தம் செய்யும் போக்கு தொடர்வதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.

பெற்றோர் பலரின் அதிருப்தியைத் தொடர்ந்து கடந்த வாரம் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் நடந்தது.

பள்ளித் தலைமை ஆசிரியை தி.கிருஷ்ணவேணி கூறியதாவது: பள்ளி கழிவறையை வாரம் ஒருமுறை ஆள்விட்டு ரூ. 500 கொடுத்து கழுவி வருகிறோம். இந்த நிலையில் பெற்றோர் ஒருவர் எங்களிடம் வந்து குழந்தைகளை கழிவறைகளைக் கழுவச் சொல்கிறீர்களா? எனக் கேட்டார். இதையடுத்து பெற்றோர்களுடனான சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். சில நாட்களில் சுத்தம் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. சிறுநீர் கழிக்கச் சென்றால் தண்ணீர் ஊற்றச் சொல்வோம். அதனை அவர்கள் கழுவச் சொல்லியதாக சொல்லி இருக்கலாம். குழந்தைகள் கழுவுவது தொடர்பான வீடியோவில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கனகமணி கூறியதாவது: இது தொடர்பாக பல்லடம் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை, பள்ளிக்கு அனுப்பி விசாரித்து அறிக்கை அனுப்பச் சொல்கிறேன். நானும் இது தொடர்பாக பள்ளிக்கு விரைவில் சென்று விசாரிக்கிறேன் என்றார்.

திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது: சம்பந்தப்பட்ட ஊராட்சி மூலம் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளும் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலரை பள்ளிக்கு அனுப்பி விசாரிக்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x