Published : 24 Aug 2023 07:51 PM
Last Updated : 24 Aug 2023 07:51 PM

உதகை நிகழ்வு செலவுகள் குறித்த தயாநிதி மாறனின் குற்றச்சாட்டு: தமிழக ஆளுநர் மாளிகை கண்டனம்

ஆளுநர் ஆர்.என்.ரவி (இடது), தயாநிதி மாறன் எம்.பி. (வலது)

சென்னை: "உதகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த குடும்ப நிகழ்வுக்கான முழு செலவையும் ஆளுநர் ஏற்றுள்ளார். பொறுப்பற்ற முறையில் ஆளுநர் குறித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசுவது கண்டனத்துக்குரியது" என்று ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநரின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பொதுவெளியில் குற்றம்சாட்டியதாக மேற்கோள்காட்டி ஆகஸ்ட் 24-ம் தேதியன்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவல்கள் தவறானவை என்பதுடன், விபரீதமான மற்றும் தவறான நோக்கம் கொண்டவை என்பதால், நடந்தவை பொது வெளியில் அறியப்பட வேண்டும். நடந்த உண்மைகள்:

  • கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஆளுநர் ஊட்டியில் குடும்ப நிகழ்ச்சியை நடத்தினார்.
  • ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ் பவனில் யாரும் தங்கவில்லை.
  • விருந்தினர்கள் மட்டுமின்றி ஆளுநரின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கும் கூட தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
  • தனியார் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் ஆளுநர் மாளிகையின் சமையலறை, விருந்தினர்களுக்கு தேநீர் அல்லது காஃபி வழங்குவதற்கு கூட பயன்படுத்தப்படவில்லை.
  • முழு நிகழ்வுக்கான விளக்குகளுக்கான மின் வசதிகள் ஆளுநர் மாளிகை இல்லாமல் ஒரு தனியார் மூலம் செய்யப்பட்டன.
  • மலர் அலங்காரத்துக்கான பூக்கள் கூட சந்தையில் இருந்து தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டன.
  • முழு நிகழ்வுக்கான பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டனர். ராஜ் பவன் ஊழியர்கள் எவரும் பயன்படுத்தப்படவில்லை.
  • விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார்.

ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் ஆளுநரே ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x